மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இருந்தும்கூட பணியாற்ற மருத்துவர்கள் யாரும் வராத காரணத்தால், மரணங்களை விலையாக கொடுத்து வருகிறார்கள் மலைவாழ்
இதற்காக தங்களுக்கு ஒரு நிரந்தர மருத்துவர் வேண்டி என்ன செய்தார்கள் என்பதும், அப்படி வரவழைக்கப்பட்ட மருத்துவரை அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத தங்கள் ஊரில் தக்க வைத்துக் கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதும், மருத்துவர் தொடர்பான மலைவாழ் மக்களின் தேவை பூர்த்தியானதா..? என்பதும்தான் இந்த நாடு திரைப்படத்தின் கதை.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘நாடு’ திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி, அருள்தாஸ், இன்பா பிரபாகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.சி.சத்யா இசையமைக்க, சக்திவேல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இனி நாடு திரைப்படம் எப்படி?
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைத் தொடரில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் நடக்கும் தற்கொலை முயற்சியும், அதைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஒட்டு மொத்த ஊரும் பரிதவிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.
ஆம்புலன்ஸுற்கு போன் செய்தும் அது வந்து சேர வெகு நேரம் ஆகும் என்பதால் தற்கொலை முயற்சி செய்த தன் தங்கையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, காடும், மலையும், ரோடும் மாறி மாறி வரும் பாதையில் மூச்சிரைக்க ஊர் மக்கள் சிலரோடு ஓடத் துவங்கும்போதே, நம் மனம் திக்திக் என அடித்துக் கொள்ள அப்படியே படத்தோடு ஒன்றிப் போகிறோம்.
எதிர்படும் ஆம்புலன்ஸில் ஏற்றி அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க காலதாமதம் ஆன காரணத்தால் அவள் மரணிக்கிறாள்.சோகம் தாங்காமல் ஒட்டு மொத்த ஊரும் ஒப்பாரியுடன் அப்பெண்ணின் உடலை அடக்கம் செய்கிறது.
ரணம் ஆறாத கிராம மக்கள் ஒரு அரசு பேருந்தை சிறை பிடித்துக் கொண்டு தங்கள் ஊருக்கு ஒரு நிரந்தர மருத்துவர் போட்டால்தான் பேருந்தை விடுவிப்போம் என்று கூற, கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
கலெக்டர் இந்த ஊருக்கு நியமிக்கப்படும் டாக்டர்களில் பல பேர் வேலையில் சேருவதற்கு முன்பே தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பணிமாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
அதையும் மீறி இங்கு வரும் மருத்துவர்களும் அடிப்படை வசதிகள் இல்லாத இந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் ஓரிரு மாதங்களில் வேறு இடங்களுக்கு பணிமாற்றம் வாங்கி சென்று விடுகிறார்கள்.நானும் அரசாங்கமும் செய்ய முடிந்தது ஒன்றுதான். ஒரு மருத்துவரை அனுப்பி வைக்கிறோம். அவருக்கு உங்கள் ஊரும், மக்களும் பிடித்துவிட்டது என்றால் இங்கிருந்து செல்ல மாட்டார்கள். புது மருத்துவருக்குப் பிடித்தபடி நடந்து கொள்வது உங்களிடம்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
புது மருத்துவர் வந்தாரா…? அவருக்கு பிடித்தபடி இருக்க ஊர் மக்கள் என்னவெல்லாம் செய்தார்கள்…? டாக்டருக்கு அந்த ஊர் பிடித்துப் போனதா,…? டாக்டர் என்ன முடிவு செய்தார்…? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
மலைவாழ் கிராமத்தின் மக்களில் ஒருவராக தர்ஷன். டாக்டருக்கு பிடித்தபடி செய்து எப்படியாவது ஊரில் டாக்டரை இருக்க வைத்துவிடு என்று சத்தியம் வாங்கிவிட்டு செத்துப் போகும் தன் தந்தைக்காகவும், தன் ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் டாக்டருக்குப் பிடித்த ஒவ்வொரு விசயங்களையும் பார்த்து பார்த்து செய்யும் கதாபாத்திரம்.
இறந்து போன தன் தங்கையைப் பற்றி கூறும் இடத்திலும், தன் அப்பாவிற்கு என்ன நோய் என்பதை தெரிந்து கொள்ளும் இடத்திலும், டாக்டரை தங்கள் ஊரில் தங்க வைக்க, கடைசி வாய்ப்பாக ஊர் மக்கள் கருதும் செயலான அந்த பெண் டாக்டரை தங்கள் ஊரின் மருமகள் ஆக்கும் முயற்சியை எப்படி செயல்படுத்துவது என்று ஊர் இளைஞர்களுக்கு உணர்ச்சி ததும்ப வகுப்பு எடுக்கும் கணத்திலும் நடிப்பால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்.
இவரை இப்படத்தின் கதாநாயகன் என்று சொல்வதைவிட கதையின் நாயகன் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
டாக்டராக மகிமா நம்பியார். வரும்போதே ஒரு வாரம் மட்டும்தான் இங்கு தங்க போகிறேன் என்கின்ற மனநிலையுடன் வந்தாலும், இருக்கும்வரை தன் பணியை செவ்வனே செய்வேன் என்கின்ற குறிக்கோளுடன் செயலாற்றும் மருத்துவர் கதாபாத்திரம்.
தங்குவதற்கு கொடுக்கப்பட்ட வீட்டில் எந்தவித வசதிகளும் இல்லாததைக் கண்டு பொங்குவதும், கொஞ்சம் கொஞ்சமாக மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பிரச்சனைகள், அவர்களுக்கான மருத்துவரின் தேவை இவைகளை உணர்ந்து அம்மக்களின் மேல் பிரியம் கொள்ளத் துவங்குவதும், தன் திருமண பத்திரிக்கையை ஊர் மக்களிடம் கொடுக்கச் செல்லும்போது, ஒட்டு மொத்த ஊரும் கூடி அமர்ந்து பேசுவதைக் கேட்டுவிட்டு, கொட்டும் மழையில் மருத்துவமனை வாசலில் அமர்ந்து கதறி அழுவதும், நான் நினைத்தால்கூட என்னால் இங்கு தங்க முடியாது, தயவு செய்து என்னை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள் என்று ஊர் மக்கள் முன்னால் அழுவதும் என மனதை கனக்க வைக்கிறார்.மலைவாழ் மக்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக ஆர்.எஸ்.சிவாஜி. ஊர் மக்களுக்கு இவ்வளவு நோய்கள் வருவதற்கும், அவசரத்திற்கு சிகிச்சை அளிக்கக்கூட பரம்பரை வைத்தியர்கள் இல்லாமல் போனதற்கு தானும் ஒரு காரணம் என்கின்ற குற்றவுணர்ச்சியுடன் வாழும் கதாபாத்திரம்.
இந்த டாக்டர் நம் கிராமத்தை விட்டு போய்விடக் கூடாது, எப்படியாவது அவரை இங்கேயே இருக்க வைத்துவிடு என்று மகன் தர்ஷனிடம் வேண்டுவதும், தான் உயிரோடு இருக்கும்வரை டாக்டர் இந்த ஊரைவிட்டுப் போக மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருப்பதைக் கூறி அதை பயன்படுத்தியாவது எப்படியாவது டாக்டரை அங்கேயே தங்க வைத்து விடு என்று கூறி திட்டம் போட்டுக் கொடுப்பதும் கலங்க வைக்கிறது.
ஊர் தலைவராக வரும் சிங்கம்புலி, டாக்டரை கிராமத்திலேயே தங்க வைக்க சீரியஸாக எடுக்கும் காமெடி முயற்சிகள் அம்மக்களின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஊர் மக்களிட,ம் “டாக்டருக்கு சத்தம் கேட்காமல் அழுங்கள்” என்று கெஞ்சும் போதும், டாக்டரின் திருமணத்திற்கு ஊர் சார்பாக சீர் செய்து அனுப்பும் போதும், தான் முதிர்ச்சியான நடிகர் என்பதை மெய்ப்பிக்கிறார்.இன்பா பிரபாகராக வந்து போகும் புதுமுக நடிகர், கனமான கதைக் களத்தை ஆங்காங்கே தன் இயல்பான காமெடிகள் மூலம் இலகுவாக்குகிறார்.
கலெக்டராக வரும் அருள்தாஸ் சில நிமிடங்களே வந்து சென்றாலும் மனதில் நிற்கும்படி அழுத்தமாக தடம் பதித்துப் போகிறார்.
சத்யாவின் இசையில் மக்களின் அவலம் நெஞ்சை அறுக்கும் ஓசை அதிகமாக கேட்கிறது.
சக்திவேலின் ஒளிப்பதிவும் கொல்லி மலையின் குளிரும் அடர்ந்த பனியும் நம் நெஞ்சுக் கூட்டிற்குள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரிஜினலாக இருக்கிறது.
கொல்லிமலையின் நீண்ட கொண்டை ஊசிகள் கொண்ட முனைகளை ஹெலிகேம் லாங்க் ஷாட்டில் பார்க்கும்போது ஒட்டு மொத்த கொல்லி மலையையே ஹெலிஹாப்டரில் இருந்து பார்க்கும் பரவசம் ஏற்படுகிறது.
இயக்குநர் எம்.சரவணன் காதல், கமர்ஷியல் கதைகளை விட்டுவிட்டு கருத்தாழம் மிக்க சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கதையை எடுத்த இடத்திலேயே ஒரு இயக்குநராக வெற்றி பெற்றுவிட்டார்.
அக்கதையை சிறந்த திரைக்கதையாக மாற்றி, எழுதிய திரைக்கதையை கச்சிதமாக திரைக்கு மடைமாற்றிய ஆற்றலிலும், கதாமாந்தர்களை தேர்ந்து எடுத்த விதத்திலும் அவருடைய வெற்றி இன்னும் ஆழம் தொடுகிறது.
இப்படத்தை பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு நம் தேசத்தில் வாழும் மலைவாழ் மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள இத்திரைப்படம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, அவர்களின் துயர் தீர்க்க பார்வையாளர்களில் ஒருவனே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவனாக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தையும் நாடு திரைப்படம் தனக்குள் வைத்திருக்கிறது.
மேலும் ஆளும் அரசாங்களுக்கு இது போன்ற மக்களின் வலி நிறைந்த குரல்களை கொண்டு சேர்க்கும் மீடியமாகவும் இத்திரைப்படத்தை படைத்திருக்கும் இயக்குநர் எம்.சரவணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இவ்வளவு இயல்பான ஒரு திரைப்படத்திற்கு சினிமாத்தனமான முடிவுகள் எதையும் கொடுக்காமல், மிக இயல்பான முடிவைக் கொடுத்ததும், குழந்தைக்கு ‘முத்துலெட்சுமி’ என்று பெயர் வைத்ததும் படத்தின் இன்ன பிற சிறப்புகள்.
மொத்தத்தில் இந்த “நாடு” திரைப்படம் நம் நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்.