பப்புவா நியூ கினி நாட்டுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக நீலம்புராடக்ஷன் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜிகணேஷன், இலங்கை நடிகை காமினி பொன்சேகா இணைந்து நடித்த பைலட் பிரேம்நாத் 1978 ஆம் ஆண்டு தமிழில்வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இந்தப் படம்தான் வெளிநாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்படம். தொடர்ந்துஇந்திய இலங்கை கூட்டு தயாரிப்பில் தமிழ்படங்கள் தயாரிக்கப்படும் என பைலட் பிரேம்நாத் படத்தின் முதல் அறிவிப்பு வெளியானபோது அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட முயற்சி தொடரவில்லை.
இந்தியா – பப்புவா நியூ கினி இணைந்து தயாரிக்கும் முதல் படம் Paba Buka என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை மலையாள இயக்குநர் டாக்டர் பிஜூ இயக்குகிறார். ரிதாபரி சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார். அவருடன் சிலிக்கான் மீடியா நிறுவனமும் இணைகிறது. இந்த இந்திய நிறுவனங்களுடன் பப்புவா நியூ கினி நாட்டின் நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி (NAFA) இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதை என்ன?
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுடன் போரிட்ட இந்திய வீரர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத, பப்புவா நியூ கினியின் நாட்டின் தலைநகரமான போர்ட் மோர்ஸ்பிக்கு செல்லும் இந்திய வரலாற்றாசிரியர்களான ரொமிலா மற்றும் ஆனந்த் ஆகியோரைப் பற்றிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் அடுத்த நகர்வா ?
கார்த்தி, ரஜினிகாந்த், விக்ரம் இவர்களது நடிப்பில் கமர்சியல் திரைப்படங்களை பா.ரஞ்சித் இயக்கி வந்தாலும், தான் சார்ந்த தலித் மக்கள் உரிமைகளை அழுத்தமாக பதிவு செய்யும் திரைப்படங்களை தனது நீலம் புரடக்ஷன்ஸ் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தும் வகையில் தயாரித்து வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது நீலம் புரடக்ஷன்ஸ் தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய தரமான திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் சினிமா தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்கள், இரண்டாம் தர நடிகர்களிடம் கூட கால்ஷீட் வாங்குவதற்கு இயலாத சூழல் உள்ளது. அதனால் நீலம் புரடக்ஷன் உடன் இணைந்து கூட்டு முயற்சியில் படம் தயாரித்து வருகின்றனர். அதன் அடுத்தகட்ட நகர்வாக வெளிநாடு ஒன்றுடன் இணைந்து நீலம் புரடக்ஷன் படம் தயாரித்து தனது எல்லையை கடல் கடந்து முதலீட்டை ஈர்க்க விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பப்புவா நியுகினியா நாடு எங்குள்ளது …..
சுதந்திர நாடான பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவின் வடக்கே தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள முடியாட்சி அமுலில் உள்ள குட்டி நாடாகும் என்பதுடன் உலகின் மூன்றாவது பெரிய தீவு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்த இங்கிலாந்து போன்ற நாடுகளும் 60% மேற்பட்ட படப்பிடிப்பை தங்கள் நாட்டில் நடத்தும் வெளிநாட்டு படங்களுக்கு மொத்த சொலவில் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கும் நடைமுறை உள்ளது. இதனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்றளவும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. காரணம் இங்கிருப்பதை போன்றே தயாரிப்பு செலவு பற்றிய கணக்குகளை சரியாக கொடுக்க முடியாததே. இவைகளை கடந்து பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஒரு குட்டி தீவு நாட்டுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிப்பது தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாகவே இருக்க கூடும்.
– இராமானுஜம்