பான் இந்தியா படங்களை உருவாக்கத் தூண்டியவர் சூர்யா என்று ராஜமெளலி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் ‘கங்குவா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் படக்குழுவினரைத் தாண்டி இயக்குநர் ராஜமெளலி, இயக்குநர் போயப்பட்டி சீனு, சித்து, விஸ்வாக் சென், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் ராஜமெளலி பேசும் போது, “பான் இந்தியா படங்களை உருவாக்கத் தூண்டியவர் சூர்யா தான். ‘கஜினி’ சமயத்தில் ஆந்திராவுக்கு வந்து சூர்யா விளம்பரப்படுத்திய விதம் ஆச்சரியமாக இருந்தது. அது இங்குள்ள இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் படிப்பினையாக இருந்தது. அதுவே என்னை ஊக்கப்படுத்தியது” என்று தெரிவித்தார்.
உடனடியாக சூர்யா மேடைக்குச் சென்று ராஜமெளலி பேசியதற்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ராஜமெளலி, “மேடை ஒன்றில் சூர்யா பேசும் போது, என்னுடன் பணிபுரிவதை தவறவிட்டுவிட்டதாக கூறியிருந்தார். உண்மையில் அவருடன் பணிபுரிவதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். எனக்கு அவர் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. அவருடைய நடிப்பு அவ்வளவு பிடிக்கும். நீங்கள் ஒரு கதை உருவாக்கியவரை விட ஒரு கதையின் பின் செல்கிறீர்கள். அது ரொம்பவே பிடித்திருக்கிறது” என்று சூர்யாவுக்கு புகழாரம் சூட்டினார் ராஜமெளலி.
இந்த நிகழ்ச்சியில் சூர்யாவும் ராஜமெளலி குறித்து பெருமையாகப் பேசினார். அவருடன் பணிபுரியாதது குறித்து “நான் ரயிலைத் தவறவிட்டேன், அதைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் ரயில் நிலையத்தில் நிற்கிறேன் என்று வெட்கமின்றி சொல்கிறேன். ஒரு நாள் கண்டிப்பாக ரயிலில் ஏறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
Prev Post