ஈகோ ஒரு மனிதனுக்குள் வளரும்போது, நல்ல மனிதனைக் கூட எவ்வளவு மோசமான ஒரு மிருகமாக அது மாற்றுகிறது என்பதைப் பேசும் திரைப்படமே “பார்க்கிங்”.
நெருக்கிப் பிடித்தாற்போல் ஒரு பைக் மற்றும் ஒரு கார் மட்டுமே நிறுத்தக் கூடிய குடியிருப்புப் பகுதியின் பார்க்கிங் ஏரியா.
அந்த பார்க்கிங் ஏரியாவில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதில் இரண்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையில் ஏற்படும் மனஸ்தாபம், அந்த மனஸ்தாபம் பரஸ்பரம் நட்புடன் இருந்த அவர்களின் நட்பில் எப்படி விரிசலை ஏற்படுத்துகிறது..அந்த விரிசல் பூசலாகி, பூசலின் விளைவால் ஈகோவும், வன்மமும் நட்பு இருந்த இடத்தில் குடிபுகுந்து கொள்ள, இரண்டு நல்ல மனிதர்கள், எப்படி எல்லோரும் வெறுக்கும் மிருகங்களாக மாறிப் போகிறார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது இந்தப் படத்தின் திரைக்கதை.கீழ் வீட்டு மற்றும் மேல் வீட்டுக் குடியிருப்புவாசிகளாக முறையே எம்.எஸ்.பாஸ்கரும், ஹரிஷ் கல்யாணும் நடித்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் குன்றில் இட்ட விளக்காக ஜொலிக்கக் கூடியவர் என்பது நாம் எல்லோரும் ஏற்கனவே அறிந்த ஒன்று.
இப்படத்தில் இன்னும் ஒருபடி மேலே போய் குன்றின் பின்புறம் இருந்து மேலெழும் சூரியனாக பிரகாசிக்கிறார்.
இந்த வயதிலும் அவர் முகத்தில் காட்டும் கோபமும், வன்மமும் ஆச்சரியப்பட வைக்கிறது.
உண்மையாகவே இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் நடிப்பைப் பார்க்கும்போது அவர் மேல் சற்று பயமே ஏற்படுகிறது. கிட்டத்தட்ட ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திற்குப் பிறகு முழு வில்லனாகவே மாறி இருக்கும் படம் இந்த ‘பார்க்கிங்’.ஹரிஷ் கல்யாணின் திரைப் பயணத்தில் ‘பார்க்கிங்’ கண்டிப்பாக ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
எதிரில் எதிரியாக நிற்பவர் ஒரு நடிப்பு சூறாவளி என்ற போதும்கூட, அந்த சூறாவளியில் காணாமல் போகாமல், எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்து பல இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார்.வன்மம் ஏறிய மனத்துடன் ஒரு சைக்கோ போல் அவர் பேசும் வசனங்கள் முதிர்ச்சியடைந்து வரும் நடிகராக ஹரிஷை முன் நிறுத்துகிறது.
காதல் மனைவி மீது அன்பையும் பாசத்தையும் பொழிவதும், தவறு செய்யாத தன் மீது களங்கம் கற்பிக்க முயன்றதை எண்ணி வெதும்புவதும், மனைவியை கேவலமாகப் பேசியவனின் முகத்தை எரிமலையாய் பொங்கி அடித்து உடைப்பதும் என நவரசங்களையும் நடிப்பில் கொண்டு வர முயன்று, பல இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ஹரிஷ் கல்யாண்.
காதல் மனைவியாக வரும் இந்துஜாவிற்கு, வயிற்றைத் தள்ளிக் கொண்டு காதல் கணவன், அப்பா ஸ்தானத்தில் இருக்கும் வயதானப் பெரியவர், இந்த இருவரின் ஈகோவிற்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரம். மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக ஈகோவும், வன்மமும் கலந்து வெறி ஏறிப் போய் மிருகமாக மாறி நிற்கும் கணவனைப் பார்த்து, ‘முதல்ல ஒரு புருஷனா தோத்த, பிறகு ஒரு அப்பனா தோத்த, இப்ப ஒரு மனுஷனாவும் தோத்துட்டய்ய…” என்று கதறும் இடத்தில் தேர்ந்த நடிப்புஇளவரசு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நச்சென மனதில் ஒரு வீட்டு ஓனரை கண் முன் நிறுத்துகிறார்.மென்மையான இலகுவான திரைப்படமாக துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கதாபாத்திரங்கள் கொடூரமானவர்களாக மாறும் பரிணாமம் காட்சிகளில் மட்டுமின்றி சாம் சி.எஸ். இசையிலும் இருப்பதை பார்வையாளராக நம்மால் உணர முடிகிறது.அதிலும் குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரும், ஹரிஷ் கல்யாணும் மோதிக் கொள்ளும் தருணங்களில் வரும் எல்லா இசைக் கோர்ப்புகளும் மனதில் பரபரப்பையும் பயத்தையும் ஒரு சேர கூட்டுகிறது.ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு 70% கதை ஒரு குடியிருப்பு போர்ஷனுக்குள்ளே மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாக மறக்கடிக்கிறது.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் எழுத்தையும், இயக்கத்தையும் பார்க்கும்போது முதல் படம் செய்யும் இயக்குநர் என்பதை நம்புவது கடினமானதாக இருக்கிறது.
ஒரு சிறிய கதைக் களத்தை எடுத்துக் கொண்டு அதை இறுதிவரை விறுவிறுப்புள்ள ஒரு கோர்வையான திரைக்கதையாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
ஒட்டு மொத்த கதையும் ஈகோவினால் விளையும் சண்டைதான் என்கின்ற முடிச்சி அவிழ்ந்தாலும்கூட, சண்டைகளிலும் அடுத்தடுத்த காட்சிகளிலும் இருக்கும் சுவாரஸ்யம் குறையவே இல்லை என்பது உண்மை.
பெரும் பட்ஜெட்டை கோராத கதையை தேர்ந்தெடுத்து அதை சிறப்பான முறையில் தயாரித்து வெளியீட்டிற்கும் கொண்டு வந்து இருக்கும் இந்த தயாரிப்பாளர்கள் சினிமா தெரிந்த தயாரிப்பாளர்களாக தெரிகிறார்கள்.
ஒரு புள்ளி வரை இயல்பான யதார்த்தமான கதையாகவும், கதாபாத்திரங்களாகவும் தெரியும் மனிதர்கள், மிருகங்களாக மாறும் தருணத்தில் கதை சற்றே யதார்த்தத்தை மீறிய புனைவாக மாறுகிறது.
கதாபாத்திர வடிவமைப்பும் சற்று சிதைகிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு மனிதன் தனக்குள் வளர்க்கக் கூடாத விடயம் ‘ஈகோ’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிய முறையில் ‘பார்க்கிங்’ கவனம் ஈர்க்கிறது.