பிராஜெக்ட் சி பாகம்-2- விமர்சனம்

ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2.
புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்  இயக்குநர் வினோ.
நாயகன் ஸ்ரீ படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு, உடல்நிலை சரியில்லாத விஞ்ஞானி ராம்ஜியைப் பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது. அந்த வீட்டில் தங்கி வேலை செய்யும் அவருக்கு,விஞ்ஞானி கண்டுபிடித்த மருந்தை பல இலட்சம் கொடுத்து வாங்கப் பலர் தயாராக இருப்பதை அறிந்துகொள்கிறார். பிறகு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி அதை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகரிக்க வசுதா கிருஷ்ணமூர்த்தி திட்டமிடுகிறார். மறுபக்கம் விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார்.இவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்வது தான் ‘பிராஜெக்ட் சி – பாகம் 2’.புதுநடிகர் ஸ்ரீ,தொடக்க காட்சிகளில் இந்தப்பூனையும் பால்குடிக்குமா? என்பது போல் அப்பாவியாக நடந்து கொள்வதிலும்.அதன்பின் வீட்டுக்குள்ளும் வெளியிலும் அதகளம்செய்வதிலும் பொருத்தமாக நடித்திருக்கிறார். 
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி,தொடக்கத்தில் உடலழகைக் காட்டி நாயகனை மட்டுமின்றி பார்வையாளர்களையும் ஈர்க்கிறார். அதன்பின் உருமாறி அவர் செய்யும் செயல்களில் அனைவரையும் மிரட்டுகிறார்.இதுவரை நகைச்சுவை நடிகராகவே பார்த்து வந்த சாம்ஸுக்கு மாறுபட்ட வேடம். அதையும் நன்றாகச் செய்து எல்லாவித வேடங்களுக்கும் நான் தகுதியானவன் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
படுத்துக்கொண்டே நடித்திருக்கும் ராம்ஜி, முகபாவனைகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இயல்பாக அமைந்திருக்கிறது.சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு சலிப்பை ஏற்படுத்தாமல் படம் நகர உதவுகிறது.இந்தப்படத்துக்கு படத்தொகுப்பாளர் பங்கு முக்கியமானது. அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் தினேஷ் காந்தி.மிக மெல்லிய கதை அதற்கேற்ற திரைக்கதை அமைத்து படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் வினோ.முதல்பாகம் மற்றும் மூன்றாம் பாகங்களில் என்ன நடக்கப்போகிறது? என்பதற்கான குறியீடுகளைக் காட்டிவிட்டாலும் அவற்றை எப்படி எடுக்கப் போகிறார்கள்? என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் அமைந்திருக்கிறது படம்.