காக்க காக்க, சாமி, சிங்கம் என ஆண் காவலர்களை முன்னிலைப்படுத்தி வரும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில் பெண் காவலர்களை மையப்படுத்தி ஓர் தமிழ் சினிமா உருவாகியிருக்கிறது.
அமைதிப்படை 2, கங்காரு போன்ற படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் இவர் அவதாரம் எடுத்துள்ள படம் மிக மிக அவசரம்.
இலங்கையிலிருந்து முன்னாள் முதல் மந்திரி ஒருவர் தமிழ் நாட்டிற்கு வேண்டுதல் நிமித்தமாக வருகின்றார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் எழும் நிலையில், பிரச்சனைகள் ஏதும் ஏற்படலாம் எனப் பந்தோபஸ்துக்கு காவல்துறையினர் அக்கோவிலுக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் புதிதாக பணிக்கு வந்த ஒரு பெண் காவலரும் இருக்கிறார். இச்சூழ்நிலையில், அவர் சந்திக்கும் பிரச்சனைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்பங்கள், பணி சார்ந்த அனுபவங்கள் என அன்றாடம் நாம் கடந்து செல்லும் பெண் காவலர்களின் ஒரு நாள் வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்கும் முயற்சியாக உருவாகியிருக்கிறது மிக மிக அவசரம்.
காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை இப்படத்தின் மூலம் கூறவிருக்கிறார் இயக்குநர். இப்படம் வெளியாவதற்கு முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காட்டியது படக்குழு. இப்படத்தைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்களுக்கு பிரத்தியேகமாக மிக மிக அவசரம் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
மேலும் படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்குச் சமர்ப்பணம் செய்ய உள்ளார்.
இப்படத்தில் பெண் காவலராக நடித்திருப்பவர் ஸ்ரீ பிரியங்கா. ஹரீஷ் குமார், முத்துராமன், ராமதாஸ் ஆகியோர் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர். சீமான் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிக மிக அவசரம் படத்தை சுரேஷ் காமாட்சியே தயாரித்தும் இருக்கிறார். வரும் அக்டோபர் 11ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார்.