B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாக நேற்று சென்னையில் நடத்தினார்கள்.
இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இவ்விழாவினில்
கவிஞர் வைரமுத்து பேசியதாவது…
தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, அதைக் காலம் காட்டிக்கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள் ஆனால் இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன், அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார், ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது….
வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார். இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இயக்குநர் நடிகர் EV.கணேஷ்பாபு என் படத்தில் நடித்திருக்கிறார். நடிகராக நீண்ட நாட்கள் அனுபவம் மிக்க இவர் இப்படி ஒரு படம் தயாரித்து, இயக்குநராகியிருக்கிறார் வாழ்த்துக்கள். இப்படத்தின் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.
பாடலாசிரியர் மதன்கார்க்கி பேசியதாவது…
இ.வி.கணேஷ்பாபு சார் மிகவும் சிறு வயதில் இருந்தே எனக்கு பழக்கம் வீட்டில் நடக்கும் விழா அனைத்திற்கும் வருவார், இந்தவிழாவையே வீட்டில் நடக்கும் ஒரு விழா போன்று நடத்துகிறார். கட்டில் என்பதை ஒரு உருவகமாகத் தலைமுறை கடந்த ஒரு அடையாளமாகக் கொண்டு வந்துள்ளார். இந்தப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசை மிகவும் பிடித்திருந்தது. அப்பா வரிகளில் அவர் பாடல் அருமையாக வந்துள்ளது. கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் என்ற அர்த்தத்தில் வரும் பாடல் அருமை. அப்பா எப்போதும் பாடல் இப்படி எழுத வேண்டும் என்று சொன்னதே இல்லை கற்றுக்கொடுத்ததே இல்லை. ஆனால் அவர் எழுதிய பாடல்களிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவர் பாடல்கள் மிகப்பெரிய அறிவைத் தந்துள்ளது. ஒவ்வொரு பாடல்களிலும் இருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். வயவா என்றால் கணவன் என்று பொருள், மனைவியை இழந்த கணவனுக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என ஒரு மனைவி சொல்வதாக வரும் பாடல் என்பதால் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினோம்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது…
வைரமுத்து ஐயா வரிகளில் மூன்று பாடல்கள், செய்தோம் மிகப்பெரிய கொடுப்பினை. கார்க்கி ஒரு பாடல் எழுதியுள்ளார். இ.வி.கணேஷ்பாபு இந்தப்படத்திற்காக வந்தபோதே 3 மெலடிப் பாடல் என்றார் அப்போதே மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இ.வி..கணேஷ்பாபு அவர்கள் இயக்கிய குறும்படத்தின் மூலமாக எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம் என்றார்
தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இ.வி.கணேஷ்பாபு பேசியதாவது…
கட்டில் படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஊடகம்தான். கவிஞர் வைரமுத்து ஐயாவை முதன் முதலில் பார்த்த போதே, அவரின் கம்பீரம் மிகவும் பிடித்திருந்தது. அவர் எவ்வளவு சிறந்தவர் என்று அவரிடம் நெருங்கிப்பழகினால் தெரியும். அவரை அருகிலிருந்து பார்த்தாலே போதும், அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அவர் இந்தப்படத்தில் இருப்பது எங்களுக்குப் பெருமை. கட்டில் மரங்களுக்குள்ளே எங்கள் மரபணுக்கூட்டம் வசிக்கிறதே எனக் கட்டில் படத்தினை ஒரு வரியில் கொண்டுவந்துவிட்டார். லெனின் சார் இந்தப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பு செய்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இந்தக்கதை. அவர் மிகச்சிறப்பான கதையைத் தந்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா அவர்களின் 101வது படம் இது. அவருக்கு என் குறும்படம் மூலம் தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. பல ஆளுமைகள் இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ஶ்ரீகாந்த் தேவா ஒரு அட்சய பாத்திரம் நாம் எதிர்பார்ப்பதைத் தந்துகொண்டே இருப்பார். சிருஷ்டி டாங்கே அர்ப்பணிப்பு உள்ள ஒரு ஹீரோயின். இந்தப்படத்தில் மிகச்சிறப்பான ஒரு கதாப்பாத்திரம் செய்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
வைரமுத்து சார் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். நானும் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். தம்பி ரவியின் பயணத்தை உங்கள் ஆசியோடு துவக்கி வைத்தீர்கள், இன்று அவன் நன்றாக இருக்கிறான் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் இசையை மிக நீண்டகாலமாக மிஸ் செய்கிறேன் அந்த மெலடி இசையை இந்தப்படத்தில் மீண்டும் கேட்டது மகிழ்ச்சி. கேமரா யார் என்று கேட்கும் அளவில் சிறப்பாக இருந்தது. ஒரு அருமையான கதையைப் படமாக எடுத்துள்ளார் கணேஷ்.சத்யஜித்ரேயேயின் படத்தை கட்டில் எனக்கு நினைவுபடுத்துகிறது.
அவருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஶ்ரீகாந்த் தேவா திரைத்துறையில் என் ஆரம்ப காலகட்டத்திலிருந்து நண்பராக இருக்கிறார். அவர் நட்பு எனக்குக் கிடைத்தது பாக்கியம். அவருக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்க ஆசைப்படுகிறேன்
நடன இயக்குநர் மெட்டிஒலி சாந்தி பேசியதாவது…
திரைப்படத்துறையில் பருந்து,கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவியை போல் கட்டில் படக்குழு வந்திருக்கிறோம். கட்டில் என்றவுடன் யோசித்தேன், ஆனால் கதை சொன்னவுடன் ஒத்துக்கொண்டேன். இந்தக்காலத்தில் உறவுகளை மதிப்பதில்லை அந்த உறவுகளின் பெருமையை இந்தப்படம் சொல்லும். இப்போது பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. மெலடி பாடல்களே இல்லை இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் நல்ல மெலடி பாடல்கள் இருக்கிறது. மனதுக்கு நிறைவாக இருக்கும். வைரமுத்து ஐயா பற்றிப் பேச வயதில்லை. அருமையான வரிகள் தந்துள்ளார். இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். அனைவருக்கும் படம் பிடிக்கும். படம் வெற்றி பெறப் பிரார்த்திக்கிறேன் நன்றி என்றார்.