பேபி அண்ட் பேபி – திரைப்பட விமர்சனம்

குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்ப்பவர்களை பற்றிய ஒருவரிக் கதை பேபி அண்ட் பேபி.

சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார்.வேலைக்காக வெளிநாடு போயிருக்கும் யோகிபாபு அங்கேயே காதல் மணம் செய்து கொள்கிறார்.அதனால் அவருடைய அப்பா இளவரசு கோபமாக இருக்கிறார்.

இரு தம்பதியினருக்கும் குழந்தை பிறக்கிறது.அந்தக் குழந்தைகள் தாத்தாக்களின் கோபத்தைப் போக்குகின்றன.ஆண் குழந்தை என்பதால் சத்யராஜ் சாந்தமாகிறார். பெண் குழந்தை என்பதால் இளவரசு குளிர்ந்து போகிறார்.அதனால் இருவரும் தாயகம்வருகிற வழியில் குழந்தைகள் மாறிவிடுகின்றன.

அதனால் பல குழப்பங்கள்.அவை என்னென்ன? அவற்றின் விளைவுகளென்ன? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது பேபி அண்ட் பேபி திரைப்படம்.

ஏற்கெனவே நகைச்சுவை கலந்து நாயகனாக நடித்து வெற்றி பெற்றிருக்கும் ஜெய்க்கு இந்தப்படத்திலும் அது போன்றதொரு வேடம் கிடைத்திருக்கிறது.அதற்கு நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார்.

ஜெய் மனைவியாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ராவின் அழகும் நடிப்பும் இயல்பாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.

யோகி பாபு வருகிற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார்.அவருக்கு இணையாக நடித்திருக்கும் சாய்தன்யாவும் பொருத்தம்.

சத்யராஜ், இளவரசு ஆகியோர்தாம் திரைக்கதையோட்டத்துக்கான கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.அவர்களுடைய வேடங்களை அனுபவ நடிப்பின் மூலம் மெருகேற்றியிருக்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஸ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் ஆகியோரும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம். பின்னணி இசை திரைக்கதைக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.பி.சாரதியின் உழைப்பால் படம் வண்ணமயமாகி பார்வை இன்பத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் பிரதாப். மூத்தோரின் மூடப் பழக்க வழக்கங்களை வலிக்காமல் நையாண்டி செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.