மணிரத்னம் மீது காதல் கொண்ட நடிகர் பார்த்திபன்

  ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில்
வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு  ஆதித்ய ராவன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர்.
பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன்,நைனார் எழுதியுள்ளனர்.கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம்.
அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில்13.05.2025 ஆம் தேதி காலையில்நடைபெற்றது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் பிரகாஷ் மோகன்தாஸ் பேசும்போது,
“இது இந்தியப் பின்னணியிலான எங்கள் முதல் திரைப்பட முயற்சி .இதற்கு முன்பு ஹாலிவுட் பின்னணியில் செய்திருக்கிறோம். இங்குள்ள பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்தது மறக்க முடியாத அனுபவம் .கதைதான் அரசன் என்பார்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் அது தெரியும்” என்றார்.
படத்தின் இயக்குநர் கிருஷ்ணா  சங்கர் பேசும்போது ,
“இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபி அவர்களுக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார்.
இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.இதை நான் நேரில் பார்த்துப் புரிந்து கொண்டேன். ஒரு நீதிமன்றக் காட்சியில் வரலட்சுமி நடித்ததைப் பார்த்து  அங்கு ஜூரிகளாக இருந்த மூன்று பேர்
கண் கலங்கினார்கள்.
நீங்கள் கண் கலங்கக் கூடாது நீங்கள் ஜூரிகள் என்ற போது இந்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டோம் என்றார்கள்.
இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள்  கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.
நடிகை வரலட்சுமி பேசும்போது,
“முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள ஆனா என்ற அமெரிக்க நடிகையுடன் நான்  நடித்தேன். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் அவருடன் நடிப்பது சவாலாக இருந்தது போட்டி போட்டு நடித்தேன்.
எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம்”என்றார்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசும்போது,
 “இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று  யூகிக்க முடியாத புத்திசாலி.
இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம்  “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?”என்று
ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது
அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது
‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.
எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும்.  ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து  பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை.
 இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது  அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர்  சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது.  28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.