மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன். முதன் முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்து வரும், ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் தீம் மியூசிக், இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். கடல் அலை போல ரசிகர்கள் கூடி சந்தோஷ் நாராயணனை கொண்டாடினார்கள்.
தமிழ்த் திரையுலகிலிருந்து சித்தார்த், தீ, ஷான் வின்சென்ட் டி பால், ஷான் ரோல்டன், நாவ்ஸ் 47, ஆஃப்ரூ, கென் ராய்சன், சத்யபிரகாஷ், பிரியங்கா N K, ஹரி சரண், ஆனந்த் அரவிந்தாக்ஷன், விஜயநாராயணன், அனந்து, கிடாகுழி மாரியம்மா, மீனாட்சி இளையராஜா, ஞானமுத்து, ஆண்டனி ஆகியோருடன் மற்றும் பலர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சி எந்த இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து 3 மணி நேரம் ஆடல் பாடலுடன் அரங்கேறியது. அட்டகாசமான ஒளி அமைப்பு, விதவிதமான கிராபிக்ஸ் காட்சிகள் என தென்னிந்தியாவில் திறந்த வெளியில்முதல் முறையாக இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சி, மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் வருவதற்கும் நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவை 12 மணி வரை இயங்குவதற்கு அனுமதி பெறப்பட்டு, நிகழ்வு முடிந்தவுடன், டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக இரயில் பயணம் செய்ய சிறப்பு அனுமதியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னரே பெற்றிருந்தனர்.