மெளனம் சாதிக்கும் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது.இந்நிலையில் அக்டோபர் 9 அன்று எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்……நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம்.எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும்இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.அவருடைய அறிவிப்பு வெளியானதும் திருமணமான நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்? என்கிற கேள்விகள் எழுந்தன.அதோடு, அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுள்ளனர் என்கிற அதிகாரப்பூர்வமற்ற செய்தியும் உலவத் தொடங்கியது.இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகப் பலரும் எதிராகப் பலரும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.ஏனெனில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறைக்குப் பல்வேறு விதிமுறைகள் உண்டு.வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் அந்த விதிகளை முறையாகக் கடைபிடித்தார்களா? அல்லது மீறினார்களா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.இந்நிலையில் நேற்று சென்னை – கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நயன்தாரா குழந்தைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு அவர், வாடகைத் தாய் மூலம் விதிமுறைகளின்படிதான் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும்.பொது சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதுதான் வழிகாட்டுதல்கள் முறையாகவெளியிடப்பட்டுள்ளன.இந்தத் தம்பதி கருமுட்டை செலுத்திப் பெற்றார்களா எனத் தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.அமைச்சர் விளக்கம் அளிக்குமளவுக்குச் சென்றுள்ள இந்தச் சிக்கல் குறித்து இதுவரை நயன்தாரா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.