மைனர் கைதிகளின் பேராசையை கூறும் வா வரலாம்

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளைச் சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வா வரலாம் வா.இப்படத்தைத் தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்.எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கருமேகங்கள் கலைகின்றன பட நாயகி  மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

வில்லனாக “மைம்” கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ நடிக்க காயத்ரி ரேமா,சரவண சுப்பையா,தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகரச் செயல்களையும் சாதாரணமாகச் செய்யத் தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர்.

இதனிடையே காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல் வயப்படுகிறார்கள். இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு  இளம் பெண்கள் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள் அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள், வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் எண்ணம் எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? கொடூரச் செயல்களைச் செய்த வில்லன் என்ன ஆனார்?
ஆகிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் விடை சொல்வதே “வா வரலாம் வா”படத்தின் கதை.

இப்படத்துக்காக, ஜிலுஜிலுன்னு ஏத்துறியே ஜிகர்தாண்டா போல -அந்த புயலப் போல பாயுறியே கபீலுன்னு என் மேல…எனும் கானா எட்வின் எழுதிய பாடலை தேவா பாடியுள்ளார். இப்பாடல் நிச்சயம் புதிய அத்தியாயம் படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இவ்விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, சித்ரா லக்ஷமணன்,வா.கௌதமன், மோகன்.ஜி, தயாரிப்பாளர்கள் என்.விஜயமுரளி, சௌந்தர பாண்டியன், வழக்கறிஞர் பாலு, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ஜே.எஸ்.கே.கோபி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

டிசம்பர் 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளிவருகிறது.