யுடியூபர்கள் தவறான செய்திக்கு எதிராக கொந்தளிக்கும் படக்குழு

சமூகவலைதளங்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான செயல்களுக்கு உந்துசக்தியாக இருப்பதை போன்று ஆதாரங்கள் இன்று பொய்யான  தகவல்களை பரப்புவதற்கும் பயன்படுகிறது. யுடியூப் சமூகவலைதளங்களில், அரசியல், சினிமா செய்திகளை பொது தளத்தில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிசை தொழிலாக மாறி போன யுடியுப் தொழில்நுட்பத்தை நேர்மையற்ற, பரபரப்பு செய்திகளைகாணொளி காட்சிகளாக வெளியிட்டு அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டவும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தியதால் நம்பகதன்மையை யுடியுப் தளங்கள் இழந்து வருகின்றன. தற்போது தெருக்கடை அளவிற்கு யுடியுப் அதிகரித்து வருகின்றன. இதனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதனை எதிர்கொள்ள, விமர்சிக்க சம்பந்தபட்டவர்கள் தயக்கம் காட்டுவதாலும், மௌனமாக கடந்து போவதாலும் யுடியுபர்களின் பேச்சுகள், விமர்சனங்கள் வரம்பு மீறி, தரம் தாழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா பற்றி அடிப்படை புரிதல் இன்றி பிரபலமானவர்களை பற்றி அவதூறான விஷயங்களை பேசினால் பிரபலமாகி விடலாம் என்கிற மனவியாதிக்கு உள்ளாகி பல யுடியுபர்கள் பேசி வருகின்றனர் என்கிற புலம்பல்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில்
நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கற மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில் செய்யாறு பாலு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் மலையாள படம், மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட  இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறவில்லை என பேசியுள்ளார்.
குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், *இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’என்றும் பேசியுள்ளார். மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.
செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.
ஒரு மூத்த பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் இவர் இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?
அந்த காணொளி  இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..
மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று செய்யாறு பாலு சொல்கிறார்.தவறான தகவல்
அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.
மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.
அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை,உங்களையே மீண்டும் நாடுகிறேன்.
உண்மை விளங்கட்டும்.
நன்மை விளையட்டும்.
பேரன்புடன்,
ச.பிரேம்குமார் எனக் குறிப்பிட்டுள்ளார்.