ராக்கெட் டிரைவர் – திரைப்பட விமர்சனம்

மறைந்த அணு விஞ்ஞானி, இந்திய ஜனாதிபதியாக இருந்த ஏ.ஜெ.அப்துல்கலாம் பதினாறு வயது அப்துல் கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல், தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட் டிரைவர்.

விண்வெளி விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருக்கும் பிரபா, இயற்பியல் பாடத்தில்

அதிக மதிப்பெண் பெறுகிறார்.அவருடைய ஏழ்மை நிலையால் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது.அதனால் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
அவருடைய ஆட்டோவில் ஒருநாள் 16 வயதுப்பையன் பயணிக்கிறார்.அவர் மறைந்த அப்துல்கலாம் என்பதும் அவர் காலப்பயணம் செய்து 1948 இல் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.
திரிலிங்கானஇந்தக் கற்பனை கதையில் அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.

விஞ்ஞானியாக முடியாத ஏக்கத்துடன் ஆட்டோ ஓட்டும் கதாநாயகன் வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார் விஷ்வத்.ஆசைப்பட்ட ஒன்றை அடைய முடியாத ஏமாற்றத்தையும் முன்னோடியாகக் கருதும் அப்துல்கலாமை கண்டவுடன் அடையும் உற்சாகத்தையும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளிலும் தன் இருப்பை சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.படத்தில் நடிகைசுனைனாவும் இருக்கிறார்.நாயகனுக்கு ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தும் வேலையைச் செய்கிறார்

சிறுவயது அப்துல் கலாமாக வரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதுபெற்ற நாகவிஷாலும்,அப்துல்கலாமின் நண்பராக வரும் காத்தாடி ராமமூர்த்தியும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெள்ஷிக் க்ரிஷ் இசையில் அவரும் செத்துட்டாரா? பாடல் கவனம் ஈர்க்கிறது.பின்னணி இசையில் கதைக் களத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ் தம்முடைய உழைப்பால் காட்சிகளை எதார்த்தமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன்,இயக்குநரின் எண்ணத்தைச் சிதறடிக்காமல் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்த்சங்கர், ஆச்சர்யப்படுத்தும்கற்பனையை வைத்து ஆழமான பல கருத்துகளை உணர்த்த முனைந்திருக்கிறார்.நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன விசயங்களை அலட்சியமாகக் கடந்து போயிருப்போம்.இப்படம் பார்ப்போர் இனி அவற்றைக் கூர்ந்து கவனிப்பர் என்பதுதான் இப்படத்தின் வெற்றி.