கோயம்பத்தூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் ராயர் என அழைக்கப்படுபவர் ஆனந்தராஜ். அவரது தங்கை கஸ்தூரி காதல் திருமணம் செய்து கொண்டதால் காதலிப்பவர்களை எதிர்க்கிறார். அவருடைய ஒரே மகளான சரண்யா யாரையும் காதலித்துவிடக் கூடாதென உறுதியாக இருக்கிறார். ஆனால், சரண்யா காதலித்துதான் திருமணம் செய்து கொள்வார் என்கிறார் ஜோசியர். ஒரு கட்டத்தில் சரண்யா யாருடனோ ஓடிவிட்டார் என ஆனந்தராஜுக்குத் தகவல் வர அவர் மகளைத் தேடிச் செல்கிறார். அவரைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தைப் பாருங்கள் என படம் ஆரம்பிப்பதற்கு முன்பு படத்தின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்தார். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட படத்தில் ஒரு காட்சியில் கூட படம் பார்ப்பவர்களால் சிரிக்க முடியவில்லை. காமெடி என்ற பெயரில் ஆளாளுக்கு என்னென்னவோ செய்கிறார்கள்.
1990களில் வந்திருக்க வேண்டிய ஒரு படம். இத்தனை வருடங்கள் கழித்து அப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு வந்து படத்தை இயக்கியிருக்கிறார் ராம்நாத்.
படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா
வேறு ஒரு ஊரைச் சேர்ந்த அவர் வேட்டைக்காரன்புதூருக்கு வந்து நண்பனுடன் தங்கி இசை கற்றுத் தருகிறாராம். அந்த ஊரே ஒரு கிராமம் போல இருக்கிறது. அங்கு ஒருவர் வந்து தங்குவதும், இசை கற்றுக் கொடுப்பதும் நம்பும்படியாக இல்லை .
படத்தில் கதாநாயகி சரண்யா தவிர இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒருவர் அனுஷ்லா, மற்றொருவர் கிரித்திகா. இவர்கள் இருவரும் கிருஷ்ணாவை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். இருவருமே கிளாமரான ஆடையுடன் சுற்றி வருகிறார்கள். கோவையில் எந்த கிராமத்தில் இப்படிப்பட்ட ஆடையுடன் சுற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை.
கதாநாயகி சரண்யா இடைவேளை வரை சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். இடைவேளைக்குப் பின்தான் அவருக்கு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணா, சரண்யா இடையில் ஒரு அரைகுறையான பிளாஷ்பேக் வேறு படத்தில் இருக்கிறது.
படத்தில் கதாநாயகன்
கிருஷ்ணாவை விட ராஜேந்திரன் அதிகக் காட்சிகளில் வருகிறார் . அந்த ஊரில் கா.க.பி.க என்ற கட்சியை நடத்திக் கொண்டு காதலர்களைப் பிரிப்பதுதான் அவரது வேலையாம். அவருக்குப் பின்னணியில் ஆனந்தராஜ் இருக்கிறாராம். காதலை எதிர்க்கும் அப்பாவாக காமெடி கலந்த வில்லத்தனம் என காமெடி செய்திருக்கிறார் ஆனந்தராஜ்.
பழம்பெரும் நடிகை கேஆர் விஜயா, ஆனந்தராஜ் அம்மாவாகவும், கஸ்தூரி ஆனந்தராஜ் தங்கையாகவும் நடித்திருக்கிறார்கள். ஆனந்தராஜைச் சுற்றி சிலர், ராஜேந்திரனைச் சுற்றி சிலர் என கோஷம் போடுகிறார்கள்.
தமிழ் சினிமா எவ்வளவு மாறிவிட்டது என எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்.