ரிப்பப்பரி – சினிமா விமர்சனம்

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ரிப்பப்பரி’.

ஹாரர் கலந்த காமெடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் படத் தொகுப்புப் பணிகளை செய்துள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் யூ டுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியதுதான் இப்படத்தின் கதை.

முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

கோவையில் தலைக்கரை என்ற கிராமத்தில் நாயகன் மகேந்திரன் தனது நண்பர்களுடன் இணைந்து யு டியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலின் தீவிர ரசிகையுடன் காதலிலும் இருக்கிறார்.

இதற்கிடையில் பக்கத்து ஊரில் யாராவது சாதிவிட்டு சாதி காதலித்து திருமணம் செய்தாலோ, அல்லது ஓடிப் போனாலோ அந்தக் காதலர்கள் கொல்லப்படுவதோடு காதலனின் தலையும் துண்டிக்கப்பட்டு டூவீலர் வண்டியின் பெட்ரோல் டேங்கிற்குள்ளும், போஸ்ட் பாக்ஸூக்குள்ளும், பால் கேனுக்குள்ளும் கிடக்கிறது. ஒரு விளையாட்டு பொம்மை, நொடிப் பொழுதில் நாயாகி இந்தப் படுகொலைகளை தொடர்ந்து செய்கிறது.

மகேந்திரனின் நெருங்கிய நண்பனும் இதேபோன்று கொல்லப்பட.. அந்த ஊர் இன்ஸ்பெக்டரின் தூண்டுதலினால் பக்கத்து ஊருக்குச் சென்று அந்தப் பேய், பொம்மை, நாய்களைப் பற்றித் துப்பறிகிறார் மகேந்திரன்.

இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? யார் அந்தப் பேய்..?எதற்காக இந்தக் கொலைகளை செய்கிறது..? கடைசியில் அந்தப் பேய் என்னவானது…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கிராமத்து இளைஞனாக மாஸ்டர் மகேந்திரன் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அவருடைய தோற்றமே அவரை ஆக்ஷன் ஹீரோ என்றோ, பல சாகசங்களை செய்யும் ஹீரோ என்றோ சொல்ல முடியாத அளவுக்கு வைத்திருக்கிறது.

இன்னமும் பள்ளி, கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு மகேந்திரன் இருப்பதால், இந்தப் படத்தில் சொந்த ஊருக்குள் யு டியூப் நடத்தும் அழகையும், அவர் செய்யும் சில அலப்பறைகளை மட்டுமே நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது.

இயக்குநர் சில இடங்களில் சிரிக்க வைக்க முயன்றுள்ளார். அந்த இடங்களிலெல்லாம் வசன உச்சரிப்பும், இயக்குதலும் குறைவாக இருப்பதால் மகேந்திரனால் தம் கட்ட முடியவில்லை. இன்னும் முயலலாம் மகேந்திரன்.

இரண்டு கதாநாயகிகளில் காவ்யாவுக்கு மிக முக்கியமான ரோல். இப்போதும் கிராமப் புற பள்ளிகளில் சாதிப் பெயரால் நடக்கும் அநீதி ஒன்று இவரை வைத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

மாஸ்டர் மகேந்திரனின் நண்பர்கள் அவ்வபோது சிரிக்க வைக்கிறார்கள். மகேந்திரனின் காதலியான ஆரத்தியை ஒரு தலையாய் காதலிப்பவனின் பேச்சும், செயலும், வசனமும் சிரிப்போ சிரிப்பைத் தருகிறது.

மகேந்திரனின் காதலியான ஆரத்தி டூயட்டுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். சாதி வெறி பிடித்தவர்களாக நடித்திருப்பவர்களும் அந்தக் கேரக்டர்களின் நடிப்பையே காண்பித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மிகவும் டல்லடித்துப் போயிருக்கிறது. பாடல்களுக்கான இசையைவிடவும் பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லலாம்.

இது டார்க் காமெடி கதை என்பதாலோ என்னவோ பேயை அனைவரின் கண்களுக்குப் படும்படியாக வைத்து இடையிடையே கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பேயின் தமிழ் எழுத்துப் பிழைகூட ஒரு காமெடியான ரசனைதான்.

இது பேய்க் கதையா.. அல்லது சாதிப் பிரச்சினையை மையப்படுத்தியதா என்கிற சந்தேகமும் படத்தின் முடிவில் நமக்கு ஏற்படுகிறது. நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினையான சாதிப் பிரச்சினையை இப்படி பேயோட்டத்தில் காட்டி ஓரங்கட்டியிருக்க வேண்டாம்தான்..!

சாதிக்கு எதிரான சொல்லையும், செயலையும், அட்வைஸ்களையும் பேயின் ஆட்டத்திலேயே சொல்லியிருப்பதால், இது படம் பார்ப்பவர்களுக்கு நிஜமான அறிவுரையைத் தந்திருக்குமா என்று தெரியவில்லை.

பேய்க் கதையை எடுக்கலாம்தான். ஆனால் அதிலும் குறைந்தபட்சமாகவாவது லாஜிக் இருக்க வேண்டும். இதில் அது டோட்டலி மிஸ்ஸிங். ஆனால், “எதைப் பற்றியும் யோசிக்காமல் வந்து படத்தைப் பார்த்து, கொஞ்சமேனும் சிரித்துவிட்டுப் போங்க” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்..!