ரெட் சாண்டல் – சினிமா விமர்சனம்

JN சினிமா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பார்த்தசாரதி, இந்தப் படத்தை தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.

இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடித்திருக்கிறார்.

வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், ‘கர்ணன்’ ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும். அப்படியொரு வலுவான கதைக் களத்தோடு வந்திருக்கும் படம்தான் இந்த ’ரெட் சாண்டல்’(RED SANDAL) திரைப்படம்.

இது ஆக்க்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம். 2015-ம் ஆண்டில் ஆந்திராவின் திருப்பதி மலைப்பகுதியில் தமிழர்கள் 25 பேரை செம்மரம் கடத்தினார்கள் என்று சொல்லி ஆந்திர போலீஸார் போலி என்கவுண்ட்டரில் படுகொலை செய்திருந்தனர். அந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இன்றைய தேதியில் இந்தியாவில் போதை மருந்து  கடத்தலைவிடவும் காஸ்ட்லியான கடத்தல் தொழில், ஆந்திராவின் காடுகளில் நடக்கும் செம்மரக் கடத்தல்தான்.

மனிதர்களின் பாலியல் நுகர்வுக்கு புத்துயிர் கொடுக்கும் ‘வயாக்ரா’ போன்ற ஊக்க மருந்துகள் முதல் மருத்துவத்தின் பல்வேறு வகையான அரிதான நோய்களுக்கு அன்னபூரணியாக உள்ளது செம்மரம். இதை வைத்து சீனாவில் இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மருந்துகளைத் தயாரித்து விற்று வருகிறார்கள்.

இதனாலேயே கிட்டத்தட்ட 200 மைல் பரப்பளவுக்கு பரந்து, விரிந்து செழித்திருக்கும் செம்மரக் காடுகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அரசியல்வியாதிகள், காவல்துறை, வனத்துறை, அதிகார வர்க்கம் என்று உயர் மட்டத்தினரின் உதவியில்லாமல் இதைச் செய்ய முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை.

ஒரு பேச்சுக்கு செம்மரக் கடத்தலை தடுப்போம் என்று சொல்லி அதற்கென தனியாக ஒரு போலீஸ் படை, வனத்துறை படையையும் ஆந்திர அரசு வைத்திருந்தாலும், செம்மரக் கடத்தல்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இந்த செம்மரத்தை வெட்டுவதும், கடத்துவதும் லேசுபட்ட வேலையில்லை. உயிரைக் கொடுத்துதான் பலரும் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். ஆந்திராவிலேயே கூலிக்கு ஆட்கள் கிடைக்காமல் போனதால், தற்போது தமிழகத்தின் ஆந்திர எல்லையில் இருக்கும் மலைக் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களை மூளைச் சலவை செய்து அவர்களை இந்த வேலைக்கு அழைத்துச் சென்று சிக்க வைக்கிறது ஒரு வியாபாரக் கும்பல்.

இதில் தப்பித்தவர்கள் சிலர்தான். மாட்டியவர்கள்தான் அதிகம். சிக்கியவர்களில் பலர் இன்னமும் விசாரணையின்றி சிறைகளில் தவித்துக் கொண்டிருக்க.. சிலர் மட்டும் போலீஸாரின் போலி என்கவுண்ட்டரில் உயிரை விட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் கதைதான் இத்திரைப்படம்.

சென்னையில் வசித்து வரும் வெற்றி ஒரு குத்துச் சண்டை வீரர். இவருடைய குடும்ப நண்பர் மாரிமுத்து. அவருடைய மகனான கபாலி விஷ்வநாத், வெற்றியின் நெருங்கிய நண்பன்.

விஷ்வநாத் ஆந்திர எல்லையில் இருக்கும் தனது மாமா வீட்டுக்கு வந்தவன், திடீரென்று பணம் நிறைய கிடைப்பதால், “மரம் வெட்டப் போகிறேன்” என்று சொல்லி ஒரு குழுவினருடன் ஆந்திராவிற்குள் போய்விட்டதாக அந்த மாமா, மாரிமுத்துவுக்குத் தகவல் கொடுக்கிறார்.

இதையடுத்த சில நொடிகளில் மாரிமுத்து ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். இதனால் தனது நண்பன் விஷ்வநாத்தை அழைத்து வருவதற்காக வெற்றி ஆந்திராவிற்கு வருகிறார். அங்கே வந்து அவனைத் தேடும்போது பல எதிர்ப்புகள், சண்டைகளெல்லாம் ஏற்படுகிறது.

கடைசியாக வெற்றி, தனது ஊர்க்காரரின் லாரியில் ஏறி அமர்ந்திருந்தபோது ஆந்திர போலீஸில் இருக்கும் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராமால் கூட்டத்தோடு கூட்டமாக கைது செய்யப்படுகிறார். காரணம், அந்த லாரியில் செம்மரங்கள் இருந்ததுதான்.!

விஷ்வநாத்தைத் தேடி வந்த நிலையில் வெற்றியும் கடத்தல் வழக்கில் சிக்கிவிட.. விஷ்வநாத்தின் குடும்பத்தினர் சிக்கலில் தவிக்கின்றனர். வெற்றி இதன் பிறகு என்ன செய்தார்..? இந்தப் பிரச்சினையில் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

இயல்பாக நடிக்கும் இளைய நாயகர்களில் தற்போதைக்கு வெற்றிதான் முதலிடம் என்றே சொல்லலாம். கதையின் நாயகனாகவும், கதையை நகர்த்தும் திரைக்கதையின் முதல்வனாகவும் இருந்து படம் முழுவதும் வியாபித்து முடிவில் நட்சத்திர நாயகனாக மாறி நம்மை ஆச்சரியப்படுத்திருக்கிறார்.

அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் குத்துச் சண்டை வீரர் என்பதால் சண்டை காட்சிகளில் அவரது பெர்பார்மென்ஸை ஓகே என்று ஏற்றுக் கொள்ளலாம். டூயட் பாடலில் காதலே இல்லாததுபோல் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவருடைய காதலியாக பள்ளி மாணவியாக நடித்திருக்கும் மயூரி புதுமுகம். புதுமையான முக ஜாடையில் பள்ளி மாணவிக்குப் பொருத்தமாகவே தெரிகிறார். சில காட்சிகளே என்றாலும் அதற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

அப்பாவுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் விஷ்வநாத், தானே வலியப் போய் மாட்டிக் கொண்ட சிக்கலில் தவிக்கும் தவிப்பை நன்கு உணர்த்தியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராமன் தனது அதிரடியால் முரட்டு போலீஸாக புரிந்து கொள்ளப்பட்டு கடைசியில், நேர்மையானவராக தன்னைக் காண்பித்துக் கொண்டு நல்லவராகிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.ஜி.எஃப். கருடா ராமின் தோற்றமும், பேச்சும், செயலும், நடிப்புமே மிரட்டியிருக்கிறது. அமைச்சரைப் பகைத்துக் கொண்டாலும், லோக்கல் போலீஸை கைக்குள் வைத்துக் கொண்டு அவர் செய்யும் அட்டகாசங்கள் அகோரம்..!

சாதாரணமாக கோடு போடச் சொன்னால் ரோடே போட்டுவிடும் அளவுக்கு நடிப்பைக் காண்பிக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் கதை, மிக உருக்கமானது. அவருடைய நடிப்புதான் படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்குள் அதிகப்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பத்தின் சோகக் கதை, படம் முடிந்த பின்னும் நமக்குள் நிழலாடுகிறது.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் கேமிராவும் படத்தில் ஒரு கேரக்டராக நடித்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அடர்ந்த காடுகளை எத்தனைவிதமான ஆங்கிளில் காட்டினாலும் நமக்குப் பார்க்கச் சலிக்கவில்லை.

மரங்களும், செடி, கொடிகளும், மண் தரைகளும், சேற்றின் அலம்பல்களும், சிறு பறவைகளின் பறத்தலையும் கொஞ்சமும் குறையாமல் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள். இதேபோல் இது அனைத்தையும் கொஞ்சமும் பிசிறு தட்டாமலும், தவற விடாமலும் ஒலிப்பதிவு செய்து கொடுத்திருக்கும் ஆஸ்கர் புகழ் ரசூல் பூக்குட்டிக்கும் ஒரு பொக்கே பார்சல்..!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சின் பின்னணி இசைதான் உணர்வு ரீதியாக படத்துடன் நம்மை ஒன்றச் செய்திருக்கிறது.

படத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம்.. இதுவரையிலும் எந்தவொரு திரைப்படத்திலும் சொல்லாத பொது அறிவு சம்பந்தமான ஒரு விஷயம்.

யார் எந்த வெளி மாநிலத்திற்கு வேலைக்கு சென்றாலும், பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சி.ஐ.ஆர். என்று சொல்லப்படும் சிவில் இன்பர்மேஷன் ரிப்போர்ட்டில் பதிவு செய்துவிட்டு சென்றால், அவருடைய உயிருக்கும், உடமைக்கும் காவல் துறையே கியாரண்டி கொடுக்கிறது.

இந்தத் தகவல் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்குமே புதிய விஷயம். இனிமேல் நிறைய பேர் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறோம்.

உண்மையில் செம்மரம் வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் ஏழ்மையான, அதிகம் படிப்பறிவில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து, சிலர் இந்தத் தொழிலில் அவர்களை ஈடுபட வைத்துள்ளார்கள்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் அமைச்சர்கள், முதலமைச்சர், மொத்த அரசும் உடந்தையாக இருக்கிறது என்பதை படத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதில் 1 சதவிகிதம்கூட பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை.

“நான் தேடுற மாதிரி தேடுறேன். நீ தப்பிக்கிற மாதிரி தப்பிச்சுக்க” என்றுதான் அரசு நிர்வாகமும், மேலிடத்து கொள்ளையர்களும் பேசி வைத்துக் கொண்டு, இந்தக் கடத்தல் தொழிலை செய்து வருகிறார்கள். அப்பாவி மக்கள்தான் இந்த சதி வலையில் சிக்கிவிடாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

நல்லதொரு படத்தை சிறந்த மேக்கிங்கில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.