ஹரீஷ்கல்யாண் இளமைத்துடிப்புடன் நடித்திருக்கிறார்.அதற்கேற்ற கதாபாத்திரமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.விளையாட்டில் பந்து வீசும்போதும் மட்டை பிடிக்கும்போதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.
அட்டகத்தி தினேஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.கல்யாண வயதில் ஒரு பெண் உள்ளவராக நடித்திருக்கிறார்.விளையாட்டில் வீரனாகத் திகழ்வதும் மனைவியிடம் பதுங்குவது,ஹரீஷ்கல்யாணிடம் மோதுவது ஆகிய எல்லாவற்றிலும் தன் நடிப்பின் மூலம் இந்த வேடத்துக்கு இவர்தான் பொருத்தம் என நினைக்க வைத்திருக்கிறார்.
ஹரீஷ்கல்யாணின் காதலியாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நன்று.அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது என்று தெரிந்து அதைச் சமாளிக்க அவர் செயல்கள் இரசிக்க வைக்கின்றன.கோபப்படும் இடங்களிலும் வரவேற்புப் பெறுகிறார்.
அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகாவிஜய், மிகப் பொருத்தமாக நடித்து பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறார்.
காளிவெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், கதிர், கீதா கைலாசம்,தேவதர்ஷினி, டிஎஸ்கே என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் வேலையைத் திறம்படச் செய்திருக்கிறார்கள். பால சரவணனும் ஜென்சன் திவாகரும் பேசும் வசனங்கள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைப்பதாகவும் அமைந்திருக்கின்றன.
தினேஷ்குமார் புருசோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக நன்றாக அமைந்து பார்வையாளர்களுக்கு இதமூட்டுகின்றன.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையும் அளவு.
கலை இயக்குநர் வீரமணி கணேஷ் உழைப்பில் கிராமத்து வாழ்க்கை கண்முன் நிறைகிறது.
ஆழமான விசயங்களைக்கூட சொற்களால் சொல்லாமல் காட்சிகளால் உணரவைத்திருப்பது சிறப்பு.