வடக்குப் பட்டி ராமசாமியில் வம்பு சீன்கள் எதுவும் இல்லையாம்

“சந்தானம், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘வடக்குப்பட்டி ராமசாமி’. ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா உட்பட பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம், பிப்.2-ல் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லரில் பெரியார் குறித்த சர்ச்சை காட்சிகள் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அதுசம்பந்தமாக படக்குழு தரப்பில் எந்தவிதமான விளக்கமும் தெரிவிக்கப்படாத நிலையில் படத்தின் இயக்குநர் தற்போது பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய, யாருடைய மனதையும் புண்படுத்தும் காட்சிகள் வடக்குப் பட்டிராமசாமி படத்தில் இல்லை என கூறியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி கூறும்போது, 

“இது முழு காமெடி படம். 1974-ம் ஆண்டு பின்னணியில் ஒரு கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து நையாண்டியால் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் பிரச்சினை எங்கு போய் முடிகிறது என்பது படம். அதிக காமெடி நடிகர்கள் இதில்பங்கேற்றுள்ளார்கள். படத்தில் எந்த சர்ச்சைக்காட்சிகளும் இல்லை. யார் மனதும் புண்படும்படியும் காட்சிகள் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும். படத்தை 63 நாளில் எடுத்து முடித்தோம். இது எல்லோருக்குமான படமாக இருக்கும்” என்றார்.