வடிவேலுவுக்கு சவாலான மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், லால், விஜயகுமார் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’கடந்த சூன் 29அன்று இந்தியா முழுவதும் 715 திரையரங்குகளில் வெளியானது. இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் அதிகமான விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்திய இந்த படம் குறுகிய நாட்களில் 50 கோடி மொத்த வசூலை கடந்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கமல்ஹாசன் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்த படம்மேலும், ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும்  ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் 9 நாட்களில் 52 கோடியை மொத்த வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் இப்படத்தை’ நாயக்குடு’ எனும் பெயரில் மொழி மாற்றம் செய்துள்ளனர் வருகிற 14ஆம் தேதி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இப்படம் வெளியாக உள்ளது அதனையொட்டி படத்தின் தெலுங்கு டிரைலரை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்படத்தின் வெற்றியை அறிவிக்கும் வகையில் நேற்று மாலை சென்னையில் மாமன்னன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்

இதில் பங்கேற்று பேசிய 

படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான

 உதயநிதி ஸ்டாலின், 

“என்னுடைய முதல் படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பெரிய வெற்றி பெற்றது. என்னுடைய கடைசி படமான ‘மாமன்னன்’ படத்துக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்து வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் 510 திரைகளில் படத்தை வெளியிட்டோம். தற்போது இரண்டாவது வாரத்தில் படம் 470 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின்முதல் 8 நாள் ஷூட்டிங்கில் மாரி செல்வராஜ் என்ன எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. முதல் 15 நாட்கள் ஷூட் முடித்து பார்த்தபோதுதான் என்ன எடுக்கிறார் என்பது புரிந்தது. வடிவேலுவின் ப்ளாஷ்பேக் போர்ஷன் அது. அதை பார்த்தபின் அவரை கட்டியணைத்தேன். மலைமேல் அவர் அழும் காட்சியைப் பார்த்து அழாதவர்கள் யாருமில்லை.வடிவேலுதான் அப்பா என கூறும்போது ஷாக் ஆனேன். பிறகு மாரி செல்வராஜ் ‘வடிவேலு பண்ணவில்லை என்றால் இந்தப் படமே வேண்டாம். வேறுபடம் எடுப்போம்’ என்றார். மாரி செல்வராஜிடம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை கொடுத்தேனோ, அதை பூர்த்தி செய்திருக்கிறார்.  9 நாட்களில் ரூ.52 கோடியை படம் வசூலித்துள்ளது. வெளிமாநிலங்கள், மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் எனது நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம்இதுதான் என்றார்.

நிகழ்ச்சியில்பங்கேற்று பேசிய வடிவேலு, 

“இவ்வளவு நாட்களாக ஒரு காமெடி நடிகராக நடித்து வந்தேன். எத்தனையோ  படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் சிம்பதி கேரக்டரில் நடித்துள்ளேன். ஆனா, இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘சந்திரமுகி’ படத்தில் ஒப்பந்தமான சமயம் அது. அப்போது, இப்படி ஒரு படம் பண்ணலாம் என்று உதயநிதி சொன்னார். படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார் என்றார். அவர் படம் பார்த்துள்ளீர்களா? என கேட்டார். இல்லை என்றேன். உடனே அன்று இரவே மாரி செல்வராஜின் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன்.

அடுத்தநாள் அவர் படத்தின் ஒன்லைன் சொல்லும்போதே நன்றாக இருந்தது. அந்தக் கதையில் நடிப்புக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால், நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. இந்த கதையின் ‘மாமன்னன்’ யார் என்றால் இயக்குநர் மாரி செல்வராஜ் தான். படத்தை ஒப்புக்கொண்ட உதயநிதி ‘மன்னாதி மன்னனன்’. நான் ஒரு குறுநில மன்னன் போல. தனக்கான வலியை மாரி செல்வராஜ் கச்சிதமாக கடத்தியுள்ளார்.ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடும். என்னை சிரிக்கக் கூடாது என கன்டிஷன் போட்ட ஒரே படம் இந்தப் படம் தான். காமெடி வடிவேலு, சீரியஸ் வடிவேலு இருவருக்கும்இடையே போராட்டம் நடந்தது. ஒரே மீட்டரில் நடித்தேன். படம் பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு தமிழக முதல்வர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார். ‘வடிவேலு பிரமாதம்… பிரமாதம்… பிரமாதம்… என்றார்’ ரஜினி பாராட்டினார். கமல் மேடையில் பாராட்டினார். படத்தில் நான் மட்டும்தான் ஹீரோ என்பது தவறானது. எல்லோரும் ஹீரோதான். குறிப்பாக மாரி செல்வராஜுக்குதான் அத்தனையும் பொருந்தும். அவரின் வயதுக்கு மீறிய படம் இது” என்றார்.