வலிமை படத்தின் வில்லன்

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக பிரசன்னா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றார். பின்னர் அவர் நடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நவ்தீப்பை வலிமை படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடிக்க தேர்வு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

நவ்தீப் ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்து இருந்தார். தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக வந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது