விஜய் வீட்டில் ரெய்டு தமிழ் சினிமா கற்றது என்ன?

நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், அன்புச்செழியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் சாமானியனுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு முறையான கணக்கு வழக்குகளை வருமான வரித்துறைக்கு சமர்பித்து வரி கட்டியிருந்தால் எதற்காக சோதனை நடத்தப்போகிறார்கள்.

அப்படியே நடத்தினாலும் கணக்கு வழக்குகளை காண்பித்து விட்டு போக வேண்டியது தானே ‘மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?’ என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

வருமான வரி சோதனைகள் திடீரென்று நடத்தப்படுவதில்லை. நீண்ட கண்காணிப்பு, தேவையான சாட்சியங்கள் ஆவணங்கள் தயாரிப்பு என உயர் அதிகாரிகள் அனுமதியோடு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. நடிகர் விஜய் வீட்டைவிட்டு கிளம்புவதற்கு முன்பு அவரது வீட்டில் சோதனையை தொடங்கும் வகையில் வருமான வரித்துறை திட்டமிட்டு இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு ‘அவர் வேலை செய்யும் இடத்தில் படப்பிடிப்பை நிறுத்த வைத்து, ஒரு கைதியைப் போன்று அழைத்து வரவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இயக்குநர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டபோது அதற்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என்று அவர் எழுதி வைத்த கடிதம் பொதுவில் பகிரப்பட்டது. அப்போது அன்புச்செழியனுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டமாக சினிமா துறையினர் பேட்டி கொடுத்தனர், கூட்டம் நடத்தினார்கள். அன்புச்செழியன் இல்லையென்றால் தமிழ் சினிமா தயாரிப்பு ஒட்டுமொத்தமாக முடங்கிவிடும் என்று தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசிய தமிழ் திரையுலகம் இன்றைக்கு ஒரு படப்பிடிப்பை நிறுத்தி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த வருமான வரித்துறையினரின் செயல்பாட்டுக்கு கருத்து சொல்ல தயாராக இல்லாமல் மவுனம் சாதித்து வருகிறது. வருமான வரித்துறை சோதனை முடிவதற்குள்ளாகவே அதைப்பற்றிய விவாதங்களை நடத்தி முடித்திருக்கின்றன தொலைக்காட்சிகள்.

வழக்கம்போல நடிகர் விஜய் வீட்டில் ரொக்கமாகப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது.

நடிகர் விஜய் ஒரு படத்துக்கு வாங்குகிற சம்பளம், அன்புச்செழியனுடைய ஒரு மாத வட்டி வருவாய், அவரது மொத்த சொத்து மதிப்பு, கல்பாத்தி அகோரத்தின் நிறுவனங்கள் செய்யக்கூடிய ஒரு வருட வரவு செலவு என இவர்கள் மூவரையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து 38 இடங்களில் மூன்று நாட்களாக வருமான வரித்துறை இடைவிடாத சோதனை நடத்தியது.

இந்த சோதனைக்குப் பின்னால் ரஜினிகாந்த் இருக்கிறார், அரசியல் இருக்கிறது என்று பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டது. மொத்தத்தில் தமிழக அரசியல் களத்தையும், சினிமா துறையையும் பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறையை ஆளும் அரசியல் மையம் பயன்படுத்துகிறது என்னும் குற்றச்சாட்டு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றோர் கடந்த நூறாண்டுகளில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகர்கள். அவர்களில் யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். பைனான்சியர் அன்புசெழியன் சந்திக்கும் மூன்றாவது வருமான வரித்துறை சோதனை இது. அதே போன்று நடிகர் விஜய் புலி பட வெளியீட்டின்போது வருமான வரித்துறை சோதனை சந்தித்திருந்தாலும் தற்போதைய சோதனையில் அதிகாரிகள் கையாண்ட அணுகுமுறை அப்போது இல்லை.

நெய்வேலியில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் வலுக்கட்டாயமாக வருமான வரித் துறையால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 38 இடங்களில் சோதனை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் செல்வாக்குப் பெற்ற நடிகர் விஜய்க்கு அதிகார வர்க்கம் நினைத்தால் எப்படிப்பட்ட நெருக்கடியை கொடுக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் முதல் அனைத்து நடிகர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது ஆளும் அரசின் விருப்பப்படி செயல்படும் வருமான வரித்துறை.

தமிழக ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு நெருக்கமான மதுரை நகர அதிமுக இளைஞரணி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அன்புச்செழியன், வருமான வரித்துறையின் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தமிழக அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது. சொந்த முதலீட்டில் படம் தயாரிக்கும் வசதியுள்ள கல்பாத்தி அகோரம், அன்புச்செழியனிடம் பிகில் பட தயாரிப்புக்கு பைனான்ஸ் வாங்கியதாக செய்தி கசியவிடப்பட்டு வருமான வரித்துறை சோதனையில் துணை நடிகராக இணைக்கப்பட்டார்.

சோதனை முடிவில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் 300 கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சோதனை முடிவதற்குள்ளாகவே தமிழக ஊடகங்கள் தங்களின் செய்தி பசிக்கு வருமான வரி சோதனை ஏன் என்கிற விவாதத்தை காரசாரமாக அடிப்படை ஆதாரங்கள் இன்றி நடத்திய கூத்தும் நடைபெற்றது. இந்த சோதனைக்கு அடிப்படைக் காரணமாக கூறப்பட்ட பிகில் திரைப்படம் 185 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்ட தாக கூறப்பட்டது, இந்த வியாபாரத்தில் 300 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது தான் உச்சபட்ச காமெடி.
 சினிமா, வியாபாரம், வசூல் இவற்றைப் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரியாத ஊடகங்களும் இதைப் பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளவில்லை. 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்ட ஒரு திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே முதலீடு மீண்டும் கிடைக்கும் அதற்குப் பின்னர் தான் லாபத்தை பற்றி யோசிக்க முடியும்.

பிகில் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதனைத் தயாரித்த ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட், நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது என்பது சினிமா வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். அப்புறம் ஏன் பிகில் வியாபாரம், அது சம்பந்தமான பைனான்ஸ் விவரங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டது பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்றால், அது அன்றாடம் நடக்கும் வருமான வரித்துறை நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிடும்.

சினிமாவில் வறட்டுத்தனமான ஒரு திரைக்கதையில் ரசிகனை சந்தோஷப்படுத்த குத்தாட்ட பாடல் காட்சி ஒன்றை இணைப்பதன் மூலம் படம் பார்க்கும் ரசிகனிடம் தனது கருத்தைக் கொண்டு சேர்க்க சில இயக்குநர்கள் முயற்சிப்பார்கள். அதுபோன்ற ஒரு இடைச்செருகல் தான் பிப்ரவரி 5-ஆம் தேதி அதிகாலை தொடங்கிய வருமான வரி சோதனை. தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அதிகாரத்தில் காலூன்ற போராடி வரும் கட்சியின் விருப்பப்படி தான் தமிழகத்தில் எல்லாமே நடந்து வருகிறது.

இருந்தபோதிலும் அவ்வப்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திமிருவதும் நடக்கிறது. தனக்கு விசுவாசமான தலைமைக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வரும் அமைச்சர்கள் சிலரைத் தங்கள் வழிக்கு கொண்டுவரவும், கட்டுபடுத்தி பயமுறுத்தி வைக்கவும் ஆளுங்கட்சி விரும்பியதால் ஒரு கலவையான வருமான வரி சோதனையை நடத்தவேண்டிய கட்டாயம் அதிகார மையத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு வகையில் ஆளும் அதிகார மையத்திற்கு இது வெற்றியைத் தேடி கொடுத்திருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறி போனக் கதையாக மாறிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அன்புச்செழியன் அலுவலகம், வீடுகளில் கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய்க்கு கணக்கு காண்பித்து விட்டால் பிரச்சனை முடிந்துவிடும்.

இந்த சோதனை மூலம் அன்புச்செழியன் சினிமா வாழ்க்கை முடிந்தது என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் சோதனை முடிந்த அடுத்த நாள் காலையிலேயே அன்புசெழியன் தனது வழக்கமான வேலைகளைத் தொடங்கியதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் விஜய் வீட்டில் ரொக்க பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேநேரம் சொத்து ஆவணங்கள் விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டது என்று கூறப்பட்டாலும், அங்கு கைப்பற்றப்பட்ட தங்கம் சம்பந்தமான தகவல்கள் வெளியில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், தங்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது என்பதை வருமான வரித்துறை மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது அதிகார மையம்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் நடித்துக் கொண்டிருக்கும்போது போர்க்கொடி தூக்கியது இல்லை. தங்களது ரசிகர் பலம் என்ன என்பதை ஆளும் அரசுக்கு காண்பித்து பயமுறுத்தியது இல்லை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகள் தமிழக அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியவரை கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவதாக அல்லது அதைப்பற்றி பேசியது கூட இல்லை.

அரசியல் களத்தில் இந்த இரு ஆளுமைகள் இல்லாமல் போன பின்னர் கமல், ரஜினி இருவரும் தங்கள் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி கமல் கட்சி தொடங்கினார். ரஜினி தொடங்கபோவதாக அவ்வப்போது கூறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இருந்தபோதே தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தியவர் நடிகர் விஜய். ‘ஜெயலலிதா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக நாங்கள் பிரச்சாரம் செய்தது தான் காரணம்’ என்று விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேசியதன் விளைவை தலைவா படவெளியீட்டு நேரத்தில் சந்தித்தார்கள்.

இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர் கொள்வதற்கு நடிகர் விஜய் அவரது அப்பா மூலம் தயார் படுத்தப்பட்டு வருகிறார் என்பதை வருமான வரி சோதனை முடிந்த பின்னர் நடந்து வரும் நிகழ்வுகள் உறுதிப்படுத்தி வருகிறது.

நடிகர்களோடு செல்பி எடுத்துக் கொள்ளும் இந்த காலத்தில், ரசிகர் கூட்டத்தோடு செல்பி எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக்கி எனக்குப் பின்னால் மிகப் பெரும் கூட்டம் இருக்கிறது என்பதை அதிகார மையத்திற்கு விஜய் உணர்த்துகிறார் என்று தான் அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மோதல் போக்கு வேண்டாம் என்று தயங்கிய நடிகர் விஜய், அப்பா சந்திரசேகரால் தயார்படுத்தப்பட்டு இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

நெய்வேலி படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியில் கூடிய கூட்டம் தானாகக் கூடியது, திரட்டிக் கொண்டு வரப்பட்டது என இரண்டும் இணைந்த கலவை என்கின்றனர் ரசிகர் மன்ற வட்டாரத்தில். திமுக தலைமையோடு முரண்பட்ட எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பொழுது தமிழகத்தில் தன்னெழுச்சியாக அவருக்கு ஆதரவான அலை உருவானது.

தற்போது விஜய்க்கு ஆதரவாக அரசியல் தெரியாத ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்தாலும் அதனை அதிகப்படுத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திரசேகர் தயார்படுத்தினார் என்கிறது தமிழக உளவுத்துறை. பிப்ரவரி 5 முதல் ஒரு வார காலமாக தமிழக ஊடகங்களின் செய்திப்பசிக்கு இரை போட்ட வருமான வரி சோதனை மூலம் முறைகேடுகள், வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை வெளியில் தெரியப்போவதில்லை.

ஆனால் வருமான வரி சோதனை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு, முறையாக தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி கட்டாத கலைத்துறையினருக்கு தங்களுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் எதிராக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதை குறும்படமாக வருமான வரி சோதனை மூலம் நடத்திக் காட்டியிருக்கிறது மத்திய அதிகார மையம்.

நெய்வேலியில் இருந்து சென்னைக்கு வரும் இடைப்பட்ட நேரத்தில் நடிகர் விஜய் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அதிகாரிகள் மூலம் ஆளும் அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளி விட்டு அப்பா சந்திரசேகர் ஆலோசனையின் பேரில் ரசிகர்களுடன்செல்பி எடுத்து தனது பலத்தை, அரசை மிரட்டும் தொனியில் பயன்படுத்துவதாக அரசாங்கம் கருதத் தொடங்கியுள்ளது.

கடந்த காலங்களில் திரையுலகில் நடிகர்கள் வீட்டில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றிருக்கிறது. எந்த நடிகரும் தங்கள் ரசிகர்களை அரசுக்கு எதிராக பயன்படுத்தியதில்லை. இதற்கு எதிர்மறையாக விஜய் தரப்பு நடவடிக்கைகள் இருப்பதால் மாஸ்டர் பட தயாரிப்புக்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள், படத்தின் ஏரியா உரிமைகளை வாங்கியவர்கள் ஆகிய விபரங்களை கையில் எடுத்திருக்கிறது வருமான வரித் துறை.
முதல்கட்டமாக தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டுள்ள வருமான வரித் துறை, வியாபாரம் சம்பந்தமான கணக்குகளை வைத்துகொண்டு விசாரணையைத் தொடங்கலாம் எனத் தெரிகிறது.