விரூபக்க்ஷா- விமர்சனம்

மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் இருவரும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய், ராஜீவ் கனகலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்ய, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். சுகுமார் திரைக்கதை செய்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். அறிமுக இயக்குநரான கார்த்திக் வர்மா டண்டூ இந்தப் படத்திற்கு கதை எழுதி, படத்தையும் இயக்கியிருக்கிறார்.கடந்த ஏப்ரல் 21-ம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.இந்தப் படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார்.கடந்தாண்டு கன்னட மொழியில் வெளியாகி பான் இந்தியா படத்தின் வசூலை வாரிக் குவித்த ‘காந்தாரா’ படத்தின் பாணியிலேயே இந்தப் படமும் உருவாகியுள்ளது.படத்தின் கதை 1970-களின் இறுதியில் துவங்குகிறது. ஆந்திராவின் உள்ளடர்ந்த காட்டுப் பகுதியில் இகுக்கும் குக்கிராமம் ருத்ரவனம். அந்தக் கிராமத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணிக்கிறார்கள். ஏன், எதனால் என்று அந்தக் கிராமத்தில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. அதே ஊரில் புதிதாக குடி வந்திருக்கும் வெங்கடாசலபதியின் மனைவி ஒரு மாற்றுத் திறனாளி. அவரால் நடக்க முடியாது. அவரை எப்படியாவது நடக்க வைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் வெங்கடாச்சலம் தனக்குத் தெரிந்த மந்திர வித்திகளையும், பில்லி சூனியங்களையும் வைத்து போராடி வருகிறார்.அதே நேரம் வெங்கடாச்சலம்தான் பில்லி சூனியம் வைத்து குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக தவறுதலாக நினைத்த ஊர்க்காரர்கள் திரண்டு வந்து வெங்கடாச்சலத்தையும், அவரது மனைவியையும் மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்துவிட்டார்கள்.அப்போது வெங்கடாச்சலத்தின் மனைவி அந்த ஊரே எரிந்து சாம்பாலாகும் என்று சாபம் விடுகிறாள். வெங்கடாச்சலத்தின் மகனை பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள் ஊர்க்காரர்கள்.சரியாக, 12 வருடங்கள் கழித்து, தனது பூர்வீக ஊரான அந்த ருத்ரவனத்தில் நடைபெற இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தாயுடன் வருகிறார் நாயகன் சாய் தரம் தேஜ்.வந்த இடத்தில் சினிமாத்தனமாக ஊர்த் தலைவரின் மகளாக நாயகி சம்யுக்தாவைப் பார்த்தவுடன் அவருடன் காதலில் விழுகிறார் நாயகன். அதே நேரம் ஊர்த் திருவிழாவன்று ஒரு முதியவரை காகங்கள் தாக்குகின்றன. மேலும் அவருக்கு அம்மை நோயும் ஏற்பட அதே கோலத்தில் அவர் ஊர்க்கோவிலுக்குள் வந்து கருவறையில் சாமியை கும்பிட்டுவிட்டு விழுந்து இறந்து போகிறார். இதனால், ஊர் மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.அந்த ஊரில் எந்த கெட்டது நடந்தாலும் அந்த ஊரின் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கும் புத்தகத்தில் அதற்கான பரிகாரத்தை படித்துப் பார்த்து அதை செய்வார்கள். இப்போது ஊர்க் கோவிலுக்குள் தீட்டு விழுந்துவிட்டபடியால் அந்தப் புத்தகத்தில் சொன்னபடி, எட்டு நாள்களுக்கு ஊர் மக்கள் யாரும் ஊரைவிட்டு வெளியே போகக் கூடாது.. அதேபோல் புதியவர்களும் உள்ளே வரக் கூடாது என்று முடிவெடுக்கின்றனர். இதை மீறினால் ஊருக்குள் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் என்று கோவில் பூசாரி ஊர் மக்களை எச்சரிக்கிறார்.இந்த நேரத்தில் தன் காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப் போக நினைக்கும் ஒரு பெண் ஊர் எல்லையைத் தாண்டுகிறார். ஆனால் ரயில்வே நிலையத்தில் அந்தப் பெண்ணின் காதலன் ரயில் விபத்தில் இறந்து போகிறார். இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடையும் காதலி திரும்பவும் ஊருக்குள் வந்து தேன் கூட்டில் தனது முகத்தை வைத்து தேனீக்களால் கொட்டப்பட்டு இறந்து போகிறார். இந்த மரணத்தைப் பார்த்த இன்னொருவரும் இறந்து போக.. ஊரே அதிர்ச்சியாகிறது.இந்த அமானுஷ்யமான இறப்புக்களை நேரில் பார்ப்பவர்களும் அடுத்தடுத்து இறந்து போகிறார்கள் என்பதைக் கண்டறிகிறார் நாயகன் சாய். இந்த அமானுஷ்ய மரணங்களுக்கு என்ன காரணம்.. அந்த ஊர் இந்த மரணத்தில் இருந்து தப்பித்ததா.. நாயகன் எதை செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதைத் சஸ்பென்ஸ், திரில்லிங்கோடு கலந்து சொல்லியிருக்கும் படம்தான் இந்த `விருபாக்‌ஷா’.நாயகன் சாய் தரம்தேஜ் வழக்கமான தெலுங்கு ஹீரோயிஸம் பெரிதும் இல்லாத தன்னுடைய கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளில்கூட அளவு தாண்டாமல் ஒரு லிமிட்டேஷனோடு இவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.நாயகியுடனான காதல் போர்ஷனில் இதுகூட செய்யலைன்னா எப்படி என்ற நமது கமெண்ட்டிற்கேற்றவாறு ரொமான்ஸை கொட்டியிருக்கிறார் சாய் தரம் தேஜ். இறுதிக் காட்சியில் தனது காதலைப் பணயம் வைத்து நாயகியை மீட்டெடுக்க இவர் பேசும் உச்சபட்ச காதல் வசனங்கள்தான் படத்தின் ஹைலைட். அந்த நேரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது.படத்தில் நாயகனைவிடவும் அதிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் நாயகி நந்தினியின் கதாபாத்திரத்துக்கு சம்யுக்தா சரியான தேர்வு என்றே சொல்லலாம். சுட்டியான கிராமத்துப் பெண் கேரக்டரில் நமக்குப் பிடித்தாற் போன்று தனது செல்லமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்,கோழி திருட்டில் துவங்கி இறுதிக் காட்சியில் தன்னுடைய ருத்ர தாண்டவத்தைக் காட்டும்வரையிலும் இப்படியொரு நடிப்பை சம்யுக்தா இத்தனை நாட்கள் எங்கே மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகமே எழுகிறது.வலிப்பு நோயால் துடிக்கும்போது ஒரு நோயாளியாகவே நம் கண் முன்னே தெரிகிறார். இறுதிக் காட்சியில் தனக்குள் புகுந்துவிட்ட ஆத்மாவின் உத்தரவுப்படி காந்தாரியாக தனது உக்கிரமான நடிப்பைக் காண்பித்திருக்கும் அந்த சில நிமிடங்களில் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்துவிட்டார் சம்யுக்தா. பாராட்டுக்கள்.  ஊர் தலைவராகவும், மகளின் சாவை நினைத்து அழுது, புலம்பும் அப்பாவாகவும் நடித்திருக்கும் ராஜீவ் கனகலா, டாக்டராக தனது கடமையைச் செய்யும் பிரம்மாஜி, அகோரியாக மிரட்டியிருக்கும் அஜய், எப்போதும் வெறுப்பையே வீசும் சுனில், பூசாரியாக நடித்திருக்கும் சாய் சந்த், பைரவாவாக நடித்திருக்கும் ரவிகிருஷ்ணா என்று மற்றைய கதாப்பாத்திரங்களும் படத்தின் தன்மைக்கேற்ப நடித்து சிறப்பித்துள்ளனர். மரணமடையும் கதாப்பாத்திரங்கள்கூட சிறப்பான இயக்கத்தினால் நம்மிடமிருந்து ஒரு பரிதாப உணர்வைப் பெறுகின்றனர்.படத்தின் சிறப்பினை பாதி அளவுக்கு நடிகர், நடிகைகள் எடுத்துக் கொள்ள மீதியை தொழில் நுட்பக் கலைஞர்களையும் நிறைவு செய்துள்ளனர்.படத்தின் பாதி காட்சிகள் இரவு நேரமாக இருக்க.. ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீன் இருட்டிலேயே அவைகளை உருவகப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியைப் படமாக்கியிருக்கும்விதம் மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.அஜினீஷ் லோக்நாத்தின் இசையும், பின்னணி இசையும் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பலம்தான். இருக்கும் ஒரே ஒரு பாடலும் திரும்பத் திரும்ப கேட்க வைத்திருக்கிறது. சஸ்பென்ஸ் காட்சிகளில் நாம் ஒரு கணம்கூட கவனத்தைத் திருப்பாத வண்ணம் இசையால் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர். வெங்கடாச்சலத்தின் வீட்டுக்குள் நடக்கும் தேடுதல் வேட்டையின்போதும், பெருமாளின் வீட்டுக்குள் அலைந்து, திரிந்து சம்யுக்தா யாரென்று கண்டறியும் காட்சியிலும் கேமிராவும், இசையும்தான் அந்தக் காட்சியில் திகிலைக் கூட்டியிருக்கின்றன.இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறது நவீன் நூலியின் கச்சிதமான படத் தொகுப்பு. கலை இயக்குநரின் திறமையான கலை இயக்கத்தினால் மொத்த ஊரையும் செட் போட்டு எடுத்திருந்தாலும் கிராமம் போலவே தோன்ற வைத்திருக்கிறார் கலை இயக்குநர்.தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை எழுதிய என்.பிரபாகரின் எழுத்தும் படத்தை ரசிக்க வைக்கிறது. நாயகன் – நாயகி இடையிலான காதல் காட்சிகளை ரசிக்கும்விதமான வசனத்தின் மூலமாக அந்தக் காட்சிகளை மேலும் ரசிக்க வைத்திருக்கிறார் வசனகர்த்தா. கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டு, எளிமையான ஒரு கதையில் சஸ்பென்ஸ், திரில்லிங்கான திரைக்கதை காட்சிகள் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். படத்தின் முக்கியமான டிவிஸ்ட்டை க்ளைமாக்ஸ் வரையிலும் உடைக்காமல் நகர்த்தியிருப்பது, ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை உண்டாக்கி படத்தின் மீதான ஈர்ப்பை உண்டாக்கிதுவக்கத்தில் முதல் காட்சியில் இருந்தேநம்மை கதைக்குள் இழுத்துவிட்ட இயக்குநர் கொஞ்சம், கொஞ்சமாக அடுத்தடுத்து நடக்கும் பல சம்பவங்களின் மூலமாக அடுத்தது என்ன..? அடுத்த பலியாடு யார்..? ஏன் இந்தக் கொலை..? யார் இதையெல்லாம் செய்வது..? என்ற கேள்விகளை ரசிகர்களுக்குள் பலமாக எழுப்பி அந்த சஸ்பென்ஸை இறுதிவரையிலும் கொண்டுபோய் படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.