வெளியீட்டுக்கு தயாரான டாடா

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா. இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.வெளியீட்டுக்கு முன்பே நல்லவிலைக்கு படம் விற்றிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டுப் பிறப்பை ஒட்டி உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்படம் சனவரி 26 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாரிசு, துணிவு ஆகிய படங்கள் அதிகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் அந்தத் தேதியில் டாடா படத்தை வெளியிட வேண்டாம் என ரெட்ஜெயண்ட் நிறுவனம் முடிவு செய்ததாம்.

டாடா படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை உரியமுறையில் விளம்பரம் செய்து அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

இதனால் இந்தத் திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு சின்னப்படங்களில் பெரிய வெற்றி பெற்ற படம் என்கிற பெருமையை இப்படம் பெறும் என்கிற நம்பிக்கைக்கு உரிய படமாக இது அமைந்திருக்கிறது என்கிறார்கள்.