ஸ்டார் – திரைவிமர்சனம்

சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும் ஆசையை சிறுவயதிலிருந்தே பற்றிப்பிடித்திருக்கிறார் கலையரசன் (கவின்). இதே போன்றதொரு கனவைக் கண்டு, அதை எட்ட முடியாமல் வாழ்வில் தோல்வியுற்று, வேறு வேலையை தொடர்பவர் அவரது தந்தை பாண்டியன் (லால்). திரையுலகில் அடியெடுத்து வைக்க, பணமும், பொறுமையும் தேவை என்பதால்(கீதா கைலாசம்) தாய்க்கு அதில் ஈடுபாடில்லை.

ஈடேறாமல் போன தன்னுடைய லட்சியம், மகனுக்காவது அகப்பட வேண்டும் என கலையரசனை நடிகனாக்க ஆதரவாக இருக்கிறார்  தந்தை பாண்டியன். காலம் ‘விபத்து’ என்றொரு வலையை விரித்து நாயகனாக துடிக்கும் கலையரசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் ‘ஸ்டார்’ ஆனாரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.

லட்சியத்தை மட்டும் மூலதனமாக கொண்ட ஒருவனின் வாழ்க்கையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களை வணிக சினிமாத் தன்மையுடன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் இளன். காதல், சண்டை, காலேஜ் கலாட்டா என ஜாலியாக தொடங்கும் படம் மையக்கதையில் இருந்து நழுவி பார்வையாளன் பொறுமையை சோதித்து ஒரு வழியாகமையக்கதைக்கு வரும்போது வேகம் பிடிக்கிறது திரைக்கதை.
“சுயநலமில்லாதது கலை அதனால் மாற்றத்தை நிகழ்த்த முடியும்”,
 “உருவாக்கறவன விட , ரசிக்குறவனுக்கு தான் அது சொந்தம்”,
“உன் கண்ணிவெடிகள் யாவும்” என தொடங்கும் வசனம் சிறப்பாக எழுத்தப்பட்டுள்ளது.
“நடிப்பால் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கலாம்”
என்ற வசனத்தை இறுதியில் நிரூபித்து கனெக்ட் செய்த விதம், வழக்கத்திலிருந்து விலகிய க்ளைமாக்ஸ் முயற்சி பாராட்டத்தக்கது.அதேநேரம் முழுமையாக ஒரு திரைகலைஞனின் வாழ்க்கையை அழுத்தத்துடன் படம் பதிவு செய்கிறதா என்றால் அது கேள்வியே. எதற்காக இரண்டு நாயகிகள்? அவர்களுக்கான தேவை என்ன? மும்பை பயணம் நாயகன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதுடன், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் நெளிநெளி என பார்வையாளனை நெளிய வைப்பதை தவிர்க்க முடியவில்லை.கண்ணாடியைப் பார்த்து கவின்உடைந்து அழும் காட்சியாகட்டும், சிங்கிள் ஷாட்டில் உணர்ச்சிப்பொங்க கவின்பேசுவது, பதற்றத்தையும் பயத்தையும் சுமந்து நடித்தது, ரொமான்ஸ், பெண் வேடம் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் கவின். அவரது திரை வாழ்க்கையில்முக்கியமான படமான இதனை முடிந்த அளவுக்கு தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார். தந்தையின் வலியை உணர்வுகளில் உருக்கியிருக்கிறால் லால். கவினின் தாயாக வரும் கீதா கைலாசம் ஓவர் ஆக்டிங் என்ற எண்ணத்தை கொடுக்காமலில்லை. நாயகி ப்ரீத்தி முகுந்தன் சொன்னதை செய்திருக்கிறார். அதிதி போகன்கர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், லிப் சிங் பிரச்சினை எட்டிப் பார்க்கவே செய்கிறது. இவர்களைத் தவிர்த்து மாறன், காதல் சுகுமார், நிவேதிதா, பாண்டியன் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் மற்றொரு ஹீரோ யுவன். எழுத்து சோர்வடையும் காட்சிகளில் தன் இசையால் அதனை மெருக்கேற்றியும், குரலால் காட்சிகளில் ஈரத்தை தடவியும் ஈர்க்கிறார். அதிலும் அந்த சர்ப்ரைஸ் முயற்சி பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி. அவரின் பாடல்கள் கதையோட்டத்துடன் கரைகின்றன. எழில் அரசின் கேமரா இறுதிக்காட்சியில் அதகளம் செய்கிறது. அதிலும் சில காட்சிகளில் ஃப்ரேம்கள் கவனிக்க வைக்கின்றன. ப்ரதீப் ராகவ்வின் ‘ஷார்ப்’ கட்ஸ் ஓரளவு கைகொடுக்கிறது. நட்சத்திரமாக ஜொலித்திருக்க வேண்டிய ஸ்டார் விட்டில் பூச்சியாகவே ஜொலிக்கிறது.
– இராமானுஜம்