ஸ்டிரைக்கர் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஹென்றி டேவிட், ஜஸ்டின் விஜய் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த மாதத்திய பேய் படங்கள் பட்டியலில் இடம் பெற வந்திருக்கும் படம் இது.மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்திருக்கும் நாயகன் ஜஸ்டின் விஜய் ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு பிஎம்டபிள்யூ காரை முழுமையாக பழுது பார்ப்பதற்குள் அந்தக் காரை உரிமையாளரிடம் கொடுத்துவிடுகின்றனர்.

உரிமையாளர் அந்தக் காரில் பயணிக்கும்போது கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி கணவன், மனைவி இருவருமே இறந்துவிடுகின்றனர். இது நாயகனுக்குத் தெரிய வர அவர் பெரிதும் வருத்தப்படுகிறார்.

இந்த நேரத்தில் பேய், பிசாசு, அமானுஷ்யங்கள் மீது அதீத ஆர்வம் கொள்கிறார் நாயகன். இதற்காக வகுப்பு எடுத்து வரும் கஸ்தூரியின் பயிற்சி நிலையத்தில் சேர்கிறார் ஜஸ்டின்.

அப்போது பேய், பிசாசு பற்றி பேட்டியெடுக்க வரும் நாயகி வித்யா பிரதீப்பின் நட்பு நாயகனுக்குக் கிடைக்கிறது. இருவரும் அவ்வப்போது சந்தித்து இந்தப் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். கடைசியில் அது இவர்களது காதலுக்கு வழி வகுக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அமானுஷ்யமான விஷயங்கள் நடப்பதாக ஜஸ்டினுக்குத் தகவல் வருகிறது. அந்த வீட்டுக்குச் சென்று தங்கி அங்கே பேய் இருக்கிறதா.. இல்லையா.. என்பதைக் கண்டறிய முயல்கிறார் ஜஸ்டின்.

அப்போது அந்த வீட்டில் நடக்கும் மர்மமான பிரச்சனையில் நாயகன் ஜஸ்டின் விஜய்யும், வித்யா பிரதீபும் மாட்டிக் கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பிரச்னையிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த ஸ்ட்ரைக்கர் படத்தின் மீதி கதை.

படத்தில் நாயகன் முற்றிலும் புதுமுகம் என்பதாலும் கதை அவரை சுற்றியே நடக்கிறது என்பதாலும் அவரது நடிப்பை நம்பித்தான் படம் இருந்தது. ஆனால் அதை நாயகனும், இயக்குநரும் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. நாயகன் தனக்குத் தெரிந்த வகையில் நடித்திருக்கிறார். இயக்குநரும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார். அவ்வளவுதான்..!

கஸ்தூரியும், வித்யா பிரதீப்பும்தான் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருப்பவர்கள். அதிலும் வித்யா பிரதீப்பின் பயவுணர்வுதான் இடைவேளைக்குப் பின்பு படத்தையே தாங்கிப் பிடித்திருக்கிறது. ராபர்ட் மாஸ்டரும், அபிநயாவும் ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் வந்து சென்றுள்ளனர்.

இது போன்ற பேய் படத்தில் தொழில் நுட்பம்தான் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் இசை, பின்னணி இசை இரண்டும் சுமாராக இருந்துவிட்டது.

ஒளிப்பதிவு ரொம்பவும் சுமாராக அமைந்து படத்தின் பல காட்சிகளை ரசிக்க விடாமல் செய்திருக்கிறது. அதேபோல் படத் தொகுப்பும் அமெச்சூர்த்தனமாக உள்ளது. காட்சிகளின் தொடர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அமைந்திருப்பது இயக்குநரின் திறமைக் குறைவைக் காட்டுகிறது. அவர் இயக்கத்தில் இன்னமும் மெனக்கெட வேண்டும்.

ஓஜோ போர்டை வைத்துக் கொண்டு பேயிடம் பேச முயலும் கலையை இன்னமும் அழகாகக் காட்டியிருக்க வேண்டும். அதேபோல் அந்த வீட்டிற்கு உரிமையாளர்கள், நாயகன் சர்வீஸ் செய்த அந்தக் காரில் பயணித்து மரணித்தவர்கள் என்பதும், அவர்களின் சாவுக்குக் காரணமான நாயகன் வஞ்சமாக அங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறான் என்பதும், நாயகன், நாயகி உடலுக்குள் புகுந்திருப்பது இறந்தவர்களின் ஆன்மாக்கள் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தால் படம் பார்த்த ரசிகர்கள் குழம்பியிருக்க மாட்டார்கள்..!

எழுத்து, இயக்கம் – எஸ்.ஏ.பிரபு, இசை – விஜய் சித்தார்த், ஒளிப்பதிவு – மணீஷ்மூர்த்தி, படத் தொகுப்பு – நாகூரான், பாடல்கள் – ஹரிசங்கர் ரவீந்திரன், உடைகள் வடிவமைப்பு – அகிலன் ராம், நடன இயக்கம் – ராபர்ட், சண்டை இயக்கம் – ஷங்கர், கலை இயக்கம் – ஆனந்த் மணி, பின்னணி இசை – வி.டி.மோனிஷ், வி.டி.பாரதி, புகைப்படங்கள் – பாக்யா, பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.