ஹாலிவுட்டிலும் சம்பள பிரச்சினை வேலை நிறுத்தம்..ஹாலிவுட்டில் நியாயமான சம்பளம் வேண்டும் என்று போராடிய திரைக்கதை ஆசிரியர்களுடன், எங்களுக்கான வாழ்வாதாரத்தை தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு அழிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நடிகர், நடிகைகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.நம் ஊரில் கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குநரும், உதவி இயக்குநர்களும் ரூம் போட்டு எழுதி முடித்து விடுவார்கள். சில சமயம் இயக்குநர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்தும் எழுதிக் கொன்டு இருப்பார்கள்.ஆனால் ஹாலிவுட்டில் டிவி நெடுந்தொடருக்கு கதை எழுத ஒரு பெரிய டீமே உண்டு. அவர்கள் அத்தனை எபிசோடுகளின் முழு ஸ்க்ரிப்டையும் கொடுத்த பின்புதான் நடிகர், நடிகையர் தேர்வு, ஷூட்டிங் ஸ்பாட் தேர்வு எல்லாம் நடக்கும்.ஹாலிவுட்டில் நம்ம ஊர் சீரியல்கள் மாதிரி தொடர்ச்சியாக ஆண்டுக்கணக்கில் தினம் ஒரு எபிசோடு வெளியாவதெல்லாம் கிடையாது. அங்கே தொலைக்காட்சி தொடர்கள் சீசன், சீசனாகத்தான் வெளியாகும். செப்டம்பர் முதல் மே மாதம்வரையிலும் ஒரு சீசன். அதன் பின்னர் அடுத்த சீசனுக்கு உட்கார்ந்து கதை எழுதி ஷூட்டிங் போய் தொடர் வெளியாகும். இப்படி சீசனுக்கு சீசன் இடைவெளி இருப்பதால், தொலைக்காட்சி தொடர் நிறுத்தப்பட்டாலும், அவை டிவியில் மறு ஒளிபரப்பாகி வரும் வருமானத்தின் ஒரு பகுதியை எழுத்தாளர்களுக்கு சம்பளமாக கொடுத்து வந்தார்கள். இதனால் ஆண்டு முழுக்க அவர்களுக்கு சம்பளம் கிடைத்தது. இப்போது ஒ.டி.டி தளங்கள் வந்தபின் இந்த வருமானம் முற்றிலும் நின்று போனது. டிவியில் ஒரு நெடுந்தொடர் வெளியானால் ஒரு எபிசோடுக்கு எழுத்தாளர்கள் டீமுக்கு தோராயமாக 24,000 டாலர்கள் சம்பளமாக கிடைத்து வருகிறது. ஆனால் ஒ.டி.டியில் 400 டாலர்கள்தான் கொடுக்கிறார்களாம். ஒ.டி.டி தளங்களை கேட்டால் அவை “எங்களுக்கே வாடிக்கையாளர்கள் மாதம் 10 டாலர்கள்தான் கொடுக்கிறார்கள். அதிலும் எல்லா ஒ.டி.டி தளங்களும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே நாங்கள் தொகையை அதிகரிக்க முடியாது..” என்று சொல்கின்றன. இந்தப் பிரச்சினையைவிடவும் இன்னொரு பிரச்சினைதான், இப்போது ஒட்டு மொத்த ஹாலிவுட்டையே தெருவுக்கு கொண்டு வந்து போராட வைத்திருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி துணை நடிகர்களை ஒரு முறை ஸ்கேன் செய்து வைத்துவிட்டு பின்பு தேவைப்படும்போதெல்லாம் அதைப் பயன்படுத்தப் போவதாக ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருப்பதுதான் இப்போதைய போராட்டத்திற்கு காரணமாகிவிட்டது. இனி சில மாதங்களுக்கு எந்த புது சீரியல்களும், படங்களும் வராது. 2008-ம் ஆண்டில் இப்படி ஒரு ஸ்ட்ரைக் ஹாலிவுட்டில் நடந்தபோது டிவி உலகமே ஸ்தம்பித்தது. டிவி தொடர்களில் புது எபிசோடுகள் வரவில்லை. ஆனால் இப்போது நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் பார்க்க ஆயிரமாயிரம் படங்கள், தொடர்கள் இருப்பதால் இந்த ஸ்ட்ரைக்கால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
Related Posts