தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் மகுடம் சூடப் போவது யார்?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2026 – 2029 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான பொருளாளர் பதவிக்கு மூவர் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அறிவிப்புக்கு முன்பாாகவே சுபாஷ் சந்திர போஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் பிற வேட்பாளர்களாக பொருளாளர் வேட்பாளராக மன்னன் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்குமரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவான பின்பு தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு சுபாஷ் சந்திர போஸ் பொருளாளர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
முரளிராமசாமி தலைமையிலான அணியில் விஜயகுமார் பொருளாளர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 திரைப்பட வீட்டுவசதி வாரிய தலைவராக இருந்த விடியல் ராஜு சுயேச்சையாக வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்பது இரண்டு அணிகளும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.
தேர்தல் அறிவித்த தொடக்க காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் வெற்றி எளிதாக இருக்கும், இருந்த போதிலும் விஜயகுமார் கடும் போட்டியாளராக இருப்பார் என கூறப்பட்டது. இருவருமே தமிழ்சினிமாவில் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருபவர்கள்.
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளை தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் என்கிற பெருமைக்குரியவர்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பிரதிநிதிவப்படுத்தும் திருப்பதி பிரதர்ஸ் சமீபகாலமாக படங்களை தயாரிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு இருவரது திரையுலக வாழ்க்கையில் அவர்களைவியாபார முக்கியத்துவம் மிக்க நடிகர்களாக மாற்றிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் என்பதுடன், இவர்கள் தயாரித்த திரைப்படங்கள் மத்திய, மாநில அரசுகள் விருதுகளை குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் அறிமுகத்துக்கு மட்டுமே இது பயன்படுகிறது. வெற்றி பெறுவதற்கு தான் சார்ந்து இருக்கும் அணியின் செல்வாக்கு, தனது சொந்த செல்வாக்கு என்பது இங்கு பிரதானமாக தேவைப்படுகிறது.
பிரதான போட்டியாளராக கருதப்பட்ட விஜயகுமாருக்கு என தனிப்பட்ட செல்வாக்கு, வாக்கு வங்கி என வாக்காளர்களிடம் இல்லை. முரளி ராமசாமியின் பாரம்பர்யம், அவரது தனிப்பட்ட செல்வாக்கு இவற்றால் அவருக்கு இருக்கும் 300 க்கும் மேற்பட்ட வாக்குகள் மட்டுமே விஜயகுமாருக்கு கிடைக்கும். எஞ்சிய வெற்றிக்கான வாக்குகள் தேர்தல் களப்பணி, வாக்களர்களை நேரடியாக அணுகுவதன் மூலமாகவே பெற முடியும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்கின்றனர் தயாரிப்பாளர்கள் .
முரளி ராமசாமிக்கான வாக்கு வங்கி அவருக்கு மட்டுமேயானது. அவரது அணியில் போட்டியிடுபவர்களுக்கு ஒரே மாதிரி போட மாட்டார்கள் அதனால் விஜயகுமார் வெற்றி வாய்ப்பு என்பத தொலை தூரத்தில் இருந்து வந்தது. தேர்தல் களத்தில் அவரை ஒரு விளையாட்டு பிள்ளையாகவே வாக்காளர்கள் பார்க்கின்றனர். எளிதில் அணுக கூடியவராக இல்லாததால் தேர்தல் களத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தவர் விடியல் ராஜு களப்பணியால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்கின்றனர்.
சுபாஷ்சந்திரபோஸ் ஆதரவு பலம் என்பது மிக வலிமையாகவே உள்ளது. ராதாகிருஷ்ணன் வாக்குவங்கி என்பது அவர் கண் அசைவுக்கு கட்டுப்பட்டது, அணி மாறி வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் வெற்றிக்கான போராட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ளார். சுபாஷ் சந்திர போஸ் சகோதரர் லிங்குசாமி பிரபல இயக்குநர் என்பதால் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் இயக்குநர்கள், மேட்டுக்குடி வாக்காளர்கள், இவருக்கு வாக்களிப்பார்கள் என்கின்றனர்.
சுயேச்சை வேட்பாளர், வாக்குவங்கி, பின்புலஆதரவு என்பது எதுவும் இல்லாதவர் என அலட்சியமாக பார்க்கப்பட்ட விடியல் ராஜு தேர்தல் களத்தில் அவரது களப்பணி, வாக்கு கேட்கும் அணுகுமுறை காரணமாக சுபாஷ் சந்திர போஸ் வெற்றியை விரட்டும் வேட்பாளராக விஸ்வரூபமெடுத்துள்ளார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். அது மட்டுமன்றி அவரது சமூகம் சார்ந்த வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் கடந்த ஒரு வார காலமாக தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் விடியல் ராஜு வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது எனக் கூறும் தயாரிப்பாளர்கள், சுயேட்சை தானே என அலட்சியப்படுத்தபட்டவர் சுபாஷ் சந்திரபோஸ்க்கு நேரடி போட்டியாளராக மறியிருக்கிறார் என்கின்றனர்.
தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தனிப்பட்ட பெருமைகள் அவரது பின்புலம், என்பதை கடந்து அவர்களது களப்பணி, கரன்சி கவனிப்பு, அணியின் ஆதரவு வாக்காளர்களின் கட்டுக்கோப்பு இவைகளே வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அந்த வகையில்
சுபாஷ் சந்திர போஸ் வலிமையான வேட்பாளராக இருந்து வருகிறார். மும்முனை போட்டி என்பது இருமுனை போட்டியாக மாறியுள்ளது.
– இராமானுஜம்