13 நாட்களில் தயாரான கொன்றால் பாவம்

வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொன்றால் பாவம்.’இந்தப் படத்தில் வரல‌ட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவருடன், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், T.S.R.ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடித்துள்ளனர்.1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
கன்னடத்தில் இரு முறை சிறந்த படத்திற்கான மாநில விருதுகளை பெற்ற இயக்குநரான தயாள் பத்மனாபன், இந்தக் கதையை 2018-ம் ஆண்டு கன்னடத்தில் ‘ஆ காரால்ல ராத்திரி’ என்ற பெயரில் இயக்கினார்.  கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் விருதுகளை பெற்றது.
பிறகு, பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கில் ‘Anaganaga O Athidhi’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்போது தமிழில் தயாராகும் இந்தப் படத்தை இயக்குநர் தயாள் பத்மநாபனே இயக்கியுள்ளார்.தமிழகத்தின் விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இதுவரையிலும் கன்னடத்தில் மட்டுமே 20 படங்களை இயக்கியிருக்கிறார். 2 முறை சிறந்த இயக்குநருக்கான கர்நாடக மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மாநாபன் கூறுகிறபோது, “இந்தப் படத்தின் மூலம் ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் புரூக் எழுதிய ‘Lithuania’ என்ற நாடகம்தான். இதைத் தழுவி கன்னடத்தில் மோகன் ஹப்பு நாடகமாக்கி வந்தார்.
அந்த நாடகத்தைப் பார்த்தபோது இதை எப்படியாவது திரைப்படமாக்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். அப்படி கன்னடத்தில் உருவானதுதான் இந்தப் படம். கன்னடத்தில் இந்தப் படம் வெற்றி பெற்று பல விருதுகளையும் எனக்குப் பெற்றுக் கொடுத்தது.நான் கன்னடத்தில் 20 படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் ஒரு படத்தைக்கூட இதுவரையிலும் இயக்கியதில்லை. தாய் மொழியான தமிழில் படம் இயக்காதது எனக்குப் பெரும் குறையாக இருந்தது. ஆனால் தமிழில் படம் செய்தால் ஒரு வலுவான கதையம்சத்துடன், வெற்றி பெறும் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.அப்போதுதான் இந்தக் கன்னட படத்தை தமிழில் செய்யலாமே என்று நினைத்தேன். எனக்கு தோதான தயாரிப்பாளர் கிடைத்ததும், அவருடன் இணைந்து நானும் இணை தயாரிப்பாளராகி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.வரலட்சுமியை வைத்து முன்பே படம் இயக்க வேண்டும் என்று நினைத்தும் அது முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது இந்தப் படத்திற்காக அவரை அணுகியதும் உடனேயே ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தை வெறும் 13 நாட்களில் முடித்துள்ளோம். சின்ன பட்ஜெட், மிகக் குறைந்த லொகேஷன்கள்தான் என்பதால்தான் இது சாத்தியமானது.நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்பதால் இந்தப் படம் நிச்சயமாக ஜெயிக்கும் என்று நான் நம்புகிறேன்..” என்றார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.