2 கே லவ் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்

இருபத்து ஓராம் நூற்றாண்டு தொடக்க இளைய தலைமுறையின் மனநிலை முந்தைய தலைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கிறது? என்பதை உரத்துப் பேசியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி.

புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது முதலே நண்பர்கள்.வளர்ந்து  கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்பும் இருவரும் இணைந்து திருமணங்களுக்குப் புகைப்படம் காணொலி எடுக்கும் நிறுவனம் நடத்திவருகிறார்கள்.அவர்கள் இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தார்களா? காதலர்களாக மாறினார்களா? திருமணத்தில் இணைந்தார்களா? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது திரைக்கதை.

அறிமுக நாயகன் ஜெகவீர்,புதுமுகங்களுக்குரிய எவ்விதத் தடைகளுமின்றி மிக இயல்பாக நடித்திருக்கிறார்.

முறையாக நடனமாடுகிறார். ஒரேயொரு இடத்தில் வரும் சின்ன சண்டைக்காட்சியிலும் தேர்ச்சி பெறுகிறார்.தோழியிடத்தில் எப்படிப் பழக வேண்டும்? காதலியிடத்தில் எவ்வளவு நெருங்க வேண்டும்? ஆகியன உட்பட எல்லா இடங்களிலும் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

மீனாட்சி கோவிந்தராஜனுக்கு சிறப்பான வேடம்.அதை மிக அநாயசமாகக் கையாண்டு நற்பெயர் பெறுகிறார்.அவருடைய அழகும் இளமைத்துள்ளலும் நன்றாகக் கைகொடுத்திருக்கிறது.

நண்பராக வரும் பாலசரவணன் நன்றாகச் சிரிக்க வைக்கிறார்.
லத்திகா,விநோதினி,ஜெயப்பிரகாஷ்,சிங்கம்புலி உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் வேடமுணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்று.விட்டுக் கொடுத்து போடா பையா பாடலுக்கு முதலிடம்.பின்னணி இசை திரைக்கதைக்குப் பொருத்தமாக இசைந்திருக்கிறது.

ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாகவும் கொண்டாட்ட மனநிலையிலும் அமைந்து காட்சிகளுக்கு இனிமை சேர்த்திருக்கிறது.

சுசீந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார்.தொண்ணூறுகளிலும் அதற்கு முன்பும் பிறந்தவர்கள்,ஆண் பெண் நட்பு,காதல்,திருமணம் ஆகியனவற்றின் மீது கொண்டிருந்த எண்ணங்களும் இரண்டாயிரத்து இளைஞர்கள் அதே விசயங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? என்பதையும் பிரச்சார நெடியின்றி காட்சிகள் மற்றும் வசனங்களின் போக்கிலேயே சொல்லிச் சென்றிருக்கிறார்.

கருத்தியலாக இப்போது இருக்கும் நிலையிலிருந்து பல படிகள் முன்னோக்கியிருக்கும் அதேவேளை திரைமொழிக்கேற்ற அம்சங்களைக் கலந்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.