இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவரையும் கடுமையாக விமர்சித்தார். “ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எம்.ஜி.ஆர் பெயரை கையிலெடுக்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிதான் அதிமுக. ஆகவே, இருவரும் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசினால் வாக்குகள் இரட்டை இலைக்குத்தானே விழும். எம்.ஜி.ஆர் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர். எம்.ஜி.ஆரை பற்றி பேசும் இவர்களின் ஈழ நிலைப்பாடு என்ன?” என கேள்வி எழுப்பினார்.
கமல்ஹாசன் எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் தேர்தலின்போது மட்டும் மக்களை சந்திக்கிறாரே என்ற கேள்வியை எழுப்ப, அரசியலே தெரியாமல் பேசுபவர்கள் மக்களை கேவலமாக நினைப்பதாக கமல் மீது குற்றம்சாட்டினார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என அவரது தந்தை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “ரஜினிகாந்தையும், கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணமே வராது. நடிப்பது மட்டுமே நாடாள்வதற்கு தகுதி என்பதற்கு இந்தத் தேர்தலுடன் முடிவு கட்ட வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
நானும் சினிமா துறையைச் சேர்ந்தவன் என்றாலும் ரஜினி, கமலெல்லாம் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருகிறார்கள். நான் மக்களை சந்தித்து அரசியலுக்கு வந்தவன். என்னை அவர்களுடன் ஒப்பிட முடியாது என்ற விளக்கத்தையும் சீமான் அளித்தார்