‘அப்பா குட்டி’ அனைவரையும் அழவைக்கும்- நெகிழ்ந்த திரை கலைஞர்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் மு மாறன் பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது. பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது. அப்போது இந்தக் கதையில் விஜய் ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.
விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.
இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது,
“விஜய் ஆண்டனி சாரைப் பற்றி நிறைய பேச வேண்டும். அவருடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். கடின உழைப்பாளியான அவர், கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர். ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதைச் சரியாகச் செய்து முடிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர். அவரைப் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும்.
இந்தப் படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் என் அறிமுகத்தில் எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகவும், எதிர்பார்ப்புகளைத் தாண்டியும் நடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும், நடிகர் தேர்வுப் பொறுப்பைக் கவனித்த என் தம்பி சுகுமார் சண்முகத்துக்கும் வாழ்த்துகள். அனைவரும் சிறப்பான வளர்ச்சியைப் பெற வேண்டும். நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,
“சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன். விஜய் ஆண்டனி சார் தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, தனிப்பட்ட முறையில் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார். அந்த அளவுக்கு படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது. விஜய் ஆண்டனி சாரிடம் படத்தைப் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டதாகத் தெரிவித்தேன். இதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் சார் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே ஒரு தந்தை மகளுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சார் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் மு. மாறன் மிகக் குறுகிய காலத்தில், ஒரே ஷெட்யூலில் சுமார் 60 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். மிகவும் அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட கதையைச் சிறப்பாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் மிகவும் சவாலானது. ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க அவர் முன்வந்ததும், அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல் பேபி லிதன்யாவின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் விஜய் ஆண்டனியுடன் அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன
இந்தப் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது, அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர். இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். படம் முடிந்ததும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு, உடனடியாகப் படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர். பின்னர் Zee தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது. விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று உடனடியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார். படம் வெளியாகும் முன்பே கிடைத்த இந்த அங்கீகாரம், அதன் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த மரியாதையாக நான் பார்க்கிறேன்.
விஜய் ஆண்டனி சாரின் உழைப்புக்கும், படத்தின் மீதான நம்பிக்கைக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா ஆகியோரின் நடிப்பும், மு. மாறனின் இயக்கமும் நிச்சயம் பேசப்படும். படம் முடிந்து வெளியே வரும்போது உங்கள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். இந்தப் படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
இயக்குநர் சசி பேசியதாவது,
“ப்ரீத்தி அஸ்ராணி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இவ்வளவு அழகாகத் தமிழைக் கற்றுக்கொண்டு பேசுவது சாதாரண விஷயமல்ல. அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
 ‘நூறு சாமிகள்’ படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி சாரிடம் அடுத்த படம் என்ன என்று கேட்டேன். அப்போது ‘அப்பா குட்டி’ என்ற தலைப்பைப் பற்றிச் சொன்னார். அந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே இதைத் தவறவிடாதீர்கள், மிகவும் அழகான தலைப்பு என்று கூறினேன். அப்பாவைப் பற்றிய கதைக்கு மிகவும் எளிமையாகவும், அனைவரது மனதிலும் பதியக்கூடியதாகவும் இந்தத் தலைப்பு அமைந்திருக்கிறது.
ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் நடிப்பதாகக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் ஜென்சன் திவாகர் இந்தப் படத்தைப் பற்றிப் பலமுறை என்னிடம் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, பேபி லிதன்யாவின் நடிப்பையும் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளையும் வெகுவாகப் பாராட்டினார். தனஞ்செயன் சார், தமிழ் தெரியாத அமேசான் பிரைம் பிரதிநிதிகளுக்குப் படத்தைத் திரையிட்டபோது, அவர்கள் இடைவேளைகூட வேண்டாம் என்று தொடர்ந்து பார்த்து, இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகக் கூறினார். ஒரு மொழி தெரியாதவர்களையும் கதை உணர்வுபூர்வமாகப் பாதித்திருப்பது படத்தின் தரத்தைக் காட்டுகிறது.
ஒரு திரைப்படத்தை உருவாக்கிய பிறகு அதை ஓடிடி நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்வது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவால். அந்தச் சூழலில் அமேசான் பிரைம் போன்ற முன்னணி தளம் படத்தைப் பார்த்துப் பாராட்டி வாங்கியிருப்பது விஜய் ஆண்டனி மற்றும் மு. மாறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட டிரைலர், பாடல்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் ஒரு மகனாக விஜய் ஆண்டனி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் ‘அப்பா குட்டி’ படத்தில் ஒரு அப்பாவாக அனைவரது மனதிலும் இடம்பிடிக்கப் போகிறார். விஜய் ஆண்டனி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,
‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவ க
விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Comments (0)
Add Comment