இந்திய சினிமாவில் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம்” பைக்கர்”

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த்,டாக்டர் ராஜசேகர்,மாளவிகா நாயர்,அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”.

இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார்.யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில்,விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு,தமிழ்,மலையாளம் உட்பட பல மொழிகளில்  வரும் 2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச்
மார்ச் 23 அன்று சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது..,

இது எனக்கு புதியஅனுபவமாக இருந்தாலும்,மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப்படத்தின் உலகத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால்,அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது.இந்தப்படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார்பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது.இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணரமுடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து,உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார் என்றார்.

ஒளிப்பதிவாளர் மதி பேசியதாவது..,
இந்தப்படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது.ரேவதி,பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும்,இந்தப்படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது.குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும்,அதை சிறப்பாக பதிவு செய்ய முழுமுயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒருமாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.இந்தப்படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,

இந்தப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி.அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான்.அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்லஉணர்வு ஏற்பட்டது.கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது.கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது.பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிகமுக்கிய பங்காற்றியது.
இந்தப்படம் இந்தியஅளவைக் கடந்து சர்வதேச அளவிலும் இரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.இந்தப்படத்தை முதல்நாளிலேயே பார்த்து ஆதரிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது..,

.‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதைமட்டும் அல்ல,அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அதனால்தான் இந்தப்படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும்,இந்தப்படம் தமிழ் இரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.ராஜீவன் சார்,மதி சார்,யுவராஜ் சார்,ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப்படத்திற்கு பெரியபலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.
அடுத்தமுறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேசவேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ்ப்படம் இயக்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.ஷர்வானந்த் சார்,ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப்படம் சாத்தியமாகியிருக்காது.அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.இந்தப்படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று.ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்.நன்றி என்றார்.

டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,….

நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது;ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்துவந்தார்.மூன்றுமாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது.இப்போதுதான் அது குணமாகி வருகிறது.இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும்போது இருகால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது.அதில் இடதுகால் முதலில் முறிந்தது,அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது.அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை.டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப்படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கேவந்தேன்.
அந்தப்படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரியவெற்றி பெற்றிருந்தது.அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி,படம் பெரியஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது.
அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன்என்பதால்,இந்தப்படமும் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம்
வெளியாகிறது.அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்கவேண்டும்.இந்தப்படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன் என்றார்.
நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது..,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ்ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ்சினிமாவின் மீதும் தமிழ்மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனிஅன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன்.என் படப்பயணத்தைப் பார்த்தால்,ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதியஜானரில் அமைந்திருப்பதை காணலாம்.அதேபோல்,‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.என் முழு திரைவாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்தபடம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது.ஏனெனில்,இது இந்தியசினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.
இந்தப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும்,உணர்ச்சி ரீதியாகவும்,மிகப்பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து,18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இருபரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன்.இந்தப்படம் என்னை நடிகராக மட்டும் அல்ல,மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது.ராஜீவன்,மதி,யுவராஜ்,ஜிப்ரான், ராஜசேகர்,மாளவிகா,வம்சிரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப்படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது.இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது;தமிழ்ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments (0)
Add Comment