ஒன்மேன்- திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கூட்டுமுயற்சி என்பது இல்லை ஒரேயொருவரால் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்க முடியும் என்பதை செய்து காட்டியிருக்கும் படம் ஒன்மேன்.

ராஜா,பூமா,ஜாக்கி,ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஓர் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்கிறார்கள்.போகும்வழியில் அவர்கள் செல்லும் வாகனம் பழுதாகிறது.அதைச் சரிசெய்ய சிலமணி நேரம் ஆகும் என்ற நிலையில் காட்டுக்குள் போகிறார்கள்.அங்கு ஒரு பழைய அறிவியல் ஆய்வகம் இருக்கிறது.

அங்கிருக்கும் ஒரு சிவப்பு நிற திரவத்தை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டு,சிவப்பு நிறக் காற்றை விடுவித்தால் அந்தக்காற்று சில நொடிகளில் உலகம் முழுவதும் பரவி எல்லா மனிதர்களும் மறைந்து விடுவார்கள்.அந்த ஊசியைப் போட்டுக் கொண்டவர்கள் மட்டும் உலகத்தில் இருப்பார்கள்.

மறைந்த உலகமக்கள் எல்லாம் மீண்டும் வர பத்துநாட்கள் ஆகும்.அந்த பத்து நாட்களும்,ஊசிபோட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதை அறிந்த,நான்கு நண்பர்களும் சிவப்புநிற ஊசி போட்டுக்கொண்டு உலகில் அவர்கள் மட்டுமே இருக்கும் சூழலை உண்டாக்குகிறார்கள்.

அதன்பின்,உலகெங்கும் போகிறார்கள். பல்வேறு நாட்டு உணவுகளைஉண்கிறார்கள்.

மகிழ்ச்சியாக ஆடி பாடுகிறார்கள்.அவர்களைத் தவிர யாருமே உலகத்தில் இல்லாத நிலையிலும் ஒரு விபத்தில் ஒரு நண்பனைப் பறிகொடுக்கிறார்கள்.

சிவப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் பத்தாம்நாள் முடிவில் அதே ஆய்வகத்தில் உள்ள பச்சைநிற திரவ ஊசியை போட்டுக்கொண்டு பச்சை நிறக் காற்றை விடுவிக்கவேண்டும்.இல்லையெனில்,அவர்கள் உடல் மட்டும் பற்றி எரிந்துவிடும் அல்லது உருகிவிடும்.மற்ற எல்லா மக்களும் மீண்டு வந்துவிடுவார்கள் எனும் நிலை.

இந்நிலையில்,மற்ற யாருமே இல்லாத,இரைச்சல்,சண்டை சச்சரவுகள் இல்லாத அமைதியான உலகம் ஒருவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.எனவே பத்துநாள் கழித்து மீண்டும் பச்சைக்காற்றைத் திறக்காமல் விட்டு,ஒட்டுமொத்த மனிதஇனத்தையும் நிரந்தரமாக இல்லாமல் செய்துவிட்டு நாம் மட்டும் உலகில் நிம்மதியாக வாழ்வோம் என்கிறார்.

ஆனால்,குடும்பம் மற்றும் உறவுகளை இழக்க விரும்பாத மற்ற நண்பர்கள் அதை மறுக்கிறார்கள்.நமக்குத் தேவையான நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு பச்சை காற்றைத் திறந்து,உலகத்தை இயங்க வைத்து பச்சை ஊசி போட்டு நம்மையும் காப்பாற்றிக் கொண்டு குடும்பத்தோடு இணைந்துவிடலாம் என்கிறார்கள் .

இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது முற்றிப்போய்,அடிதடிச் சண்டையாகத் தொடங்கி துப்பாக்கிச் சூடுவரை போகிறது.அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,ஒளிப்பதிவு,இசை,படத்தொகுப்பு,நடனம்,சண்டை ஆகிய தொழில்நுட்ப வேலைகள் செய்தது மட்டுமின்றி திரையில் தோன்றும் நூற்றுக்கணக்கான நடிகர்களாகவும் நடிகையாகவும் கூட நடித்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

வியாபார அம்சங்கள் நிறைந்த கதை,அதற்கேற்ற திரைக்கதை அதற்குள் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதநேய உணர்வு என எல்லாவற்றிலும் சிறந்து,உலகமாந்தராக தன்னை அடையாளப்படுத்தி வியக்க வைத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்,படத்தில் தமிழீழம் ஏர்லைன்ஸ் என்கிற விமானத்தைக் காட்டி நான் தமிழன் என்று உரத்துச் சொல்லியிருக்கிறார்.

TAGS: One man Sankagiri Rajkumar

Comments (0)
Add Comment