கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த்வர்.அவருக்கு உயர்சாதி நாயகி காயத்ரி மீது காதல்.வழக்கம் போல் அதற்கு எதிர்ப்பு.அதனால் நாயகி தற்கொலை செய்கிறார்.அதன்பின் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் நிலை என்ன? என்பதை உளவியல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறது படம்.
நாயகன் லிங்கேஷ்,ஓர் ஆராய்ச்சியாளர் மற்றும் சமூகப் போராளி ஆகியனவற்றிற்கு அளந்து தைத்த சட்டை போல சரியாகப் பொருந்தியிருக்கிறார்.காதல் தோல்வி அடைந்த நிலையில் இன்னொரு காதல் வர அதை எதிர்கொள்ளும் நடிப்பில் ஈர்க்கிறார்.
காயத்ரியின் எளிய அழகும் தோற்றப் பொலிவும் இந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்க உதவி புரிந்திருக்கிறது.
கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுமோல்தான் இந்தக் கதையில் நாயகி.இந்தக் கதாபாத்திரம் மூலம் என்ன சொல்லவேண்டும் என்று இயக்குநர் எண்ணினாரோ அதை அப்படியே நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
அனுமோலின் கணவராக நடித்திருக்கும் ஐசக்கின் கதாபாத்திரப் படைப்பு நேர்த்தி.அதில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
மனநல மருத்துவராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கை வைத்து ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் மருத்துவம் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்கு தன்நடிப்பினால் நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ரமேஷ் திலக்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்குக்கு கொண்டாட்டமான கதைக்களம்.அவரும் மகிழ்ந்து நமக்கும் மகிழ்வான காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார்.ஜஸ்டின் இசையில் பாடல்கள் சுகம்.
படத்தொகுப்பாளர் பிரவீன்,இயக்குநரின் எண்ணம் உணர்ந்து படத்தைத் தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தமயந்தி,சாதிப்பாசத்தில் கண்மூடித்தனமாகக் காதலை எதிர்ப்போரை சிந்திக்க வைக்கும் நோக்கில் நாயகியைப் பலி கொடுத்திருக்கிறார்.பரப்புரை தொனியின்றி காட்சியூடகத்துக்குத் தக்க சிந்தித்திருக்கிறார் என்பது படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.