காளிதாஸ் – 2 நம்பிக்கையளிக்கும் படம் – இயக்குநர் ரஞ்சித் நம்பிக்கை

பரத் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் காளிதாஸ்.விமர்சன ரீதியாகவும்,வசூல்ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் அந்த படத்தை இயக்கியஇயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய்கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல்பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.அதேபாணியில், இந்த இரண்டாம்பாகமும் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும், என்.யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’,‘கருடன்’,‘மகாராஜா’ போன்ற வெற்றிப்படங்கள் வெளியானதால்,‘காளிதாஸ் 2’ படத்திற்கு திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20 அன்று நடைபெற்றதுஇந்த விழாவில் படக்குழுவினரோடு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது,
 “செந்திலுக்கும், நாராயணசாமிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் சுவாரசியமான ஒரு படம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும், சங்கீதா மேம், பவானி, அபர்ணா மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத்தும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.

இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது.

சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன.
முன்பு இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம். ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும்” என்று பேசினார் பா.ரஞ்சித்.

 

Comments (0)
Add Comment