சக்தி திருமகன் திரைப்பட விமர்சனம்

காசு வாங்கினாலும் ஒப்புக் கொண்ட வேலையை கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை பொது சமூகம்உணர்வதே இல்லை. நியாயமானவேலையை முடித்துக் கொடுப்பதற்கு கையூட்டு லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை தோலுரிக்க  முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன்.
அரசியல், அரசு அதிகாரிகள் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக்கொடுத்துவிடுவார்.
அவருக்கும் இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் ஆவார் என்கிற இடத்திலிருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் மோதல் ஏற்படுகிறது.அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சக்தி திருமகன் திரைப் படம்.

பெரிய பெரிய வேலைகளைச் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொள்வது விஜய் ஆண்டனிக்குக் கைவந்த கலை.அதற்குத் தகுந்த வேடம் இது என்பதால் எல்லாக் காட்சிகளிலும் பிரமிப்பூட்டுகிறார்.

நாயகி திருப்திக்கு நல்ல அறிமுகப்படம்.கொடுத்த வேடத்தை நன்றாகப் புரிந்து நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் காதல் ஓவியம் கண்ணன், சமகால நிஜ அரசியல்தரகரை நினைவுபடுத்தும் வேடத்தை ஏற்று அதனை சாரியாக செய்திருக்கிறார்.அவருடைய வேடம் மூலம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று பொது சமூகம் தெரிந்து கொள்ள முடியும்.

வாகை சந்திரசேகர், ரவிசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேடங்களும் வசனங்களும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இந்தக்கதைக்கு என்ன தேவை என்பதை அறிந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கிறார்.

அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு எழுதி இயக்கியிருக்கிறார்.

அரசியல் தரகர்களை தமிழ்நாடு மற்றும் இந்தியா எனப் பிரித்ததிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் பின்புலம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை காட்சிபடுத்தியது பெரும் வரவேற்புக்குரியன. லஞ்சம்ஊழல் ஆகியனவற்றைத் தாண்டி இருபெரும் அரசியல் சித்தாந்த மோதலை அடிநாதமாக வைத்திருப்பது அவருடைய அரசியல் புரிதல், அறிவை, ஆளுமையை உறுதிப்படுத்துகிறது.

மக்கள் எப்போதும் ஏதாவது ஒரு நடிகர் நம்மைக் காக்கமாட்டாரா? என்றுதான் நினைப்பார்கள் என்பது உள்ளிட்ட பல வசனங்கள் சமகால அரசியலை  அம்பலப்படுத்துவது படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கின்றன.

அடிப்படைஅரசியல் அறிவு இல்லாமல் சமகால அரசியல் புரிதல் இல்லாமல் நுனிப்புல் மேயும் தமிழ் இயக்குநர்களுக்கு மத்தியில் அரசியலை முழுமையாக உள்வாங்கி திரைக்கதை எழுதும் இயக்குநராக தன்னை உறுதிப்படுத்தி இருக்கிறார் சக்தி திருமகன் இயக்குநர் அருண் பிரபு

 

Comments (0)
Add Comment