சண்டியர் படப்பிடிப்பு தொடக்கம் கிருஷ்ணசாமி மிரட்டல்?

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முன்னதாக, நவம்பர் 6 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பான ‘சண்டியர்’ என்பதை வெளியிட்டனர். இந்தத் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்துக்கான கமல்ஹாசனின் Look Test புகைப்படங்கள் பெரியளவில் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, நவம்பர் 7 ஆம் தேதிபடப்பிடிப்பு தொடங்கப்பட்டு ‘சண்டியர்’ தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
தனித்துவமான கதைசொல்லல் முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், தலைமுறைகளைக் கடந்து சினிமாத் துறையில் தனது பன்முகத்தன்மை, கலைத் திறன் மற்றும் புதுமைகளுக்காகக் கொண்டாடப்படும் திரு. கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார். இந்த இரு படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சண்டியர்’ திரைப்படத்தில்  அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், அன்பரிவ் சண்டை பயிற்சி இயக்குநர்களாகவும், கே. எஸ். சுனில் ஒளிப்பதிவாளராகவும், சி. எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் மற்றும் அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பாளராகவும் இந்தப் படத்தில் பணியாற்றுகின்றனர்.
‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நவம்பர் 7 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கமல்ஹாசன் 2003-ஆம் ஆண்டு தனது திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ என்று பெயர் சூட்டியபோது கடுமையாக எதிர்த்தோம். குறிப்பாகத் தென் தமிழகத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மிகப்பெரிய மோதலை உருவாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்தப் பெயரைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
எங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, கமல்ஹாசனை அழைத்து அந்தப் பெயரை மாற்றுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு படத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துத் திரைப்படம் எடுக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். பொதுவாகப் பிறந்த நாளில் நல்ல செய்திகளை அறிவிப்பார்கள். ஆனால் கமல்ஹாசன் தனது பிறந்த நாளிலேயே பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்ட பெயரை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் தனது ஆணவப் போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.அன்று கமல்ஹாசன் ஒரு நடிகராக இருந்தார். இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அன்றைவிட இன்று அவருக்கு மிகப்பெரிய பொறுப்புகள் இருக்கின்றன. எனவே அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் ஆதரவுடன் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பாகுபாடு காட்ட மாட்டேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துள்ள அவர், சாதிய மோதலைத் தூண்டக்கூடிய வகையில் திரைப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

‘சண்டியர்’ என்பதே சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய பெயர். அதுமட்டுமின்றி, Revenge can be settled only in blood என்ற கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ரத்தக் கடனை ரத்தத்தால்தான் தீர்க்க முடியும் என்ற கருத்துடன் திரைப்படத்தை அறிவித்திருப்பது ஆபத்தானது.

உலகில் பல தலைவர்களும் ஞானிகளும் கூறிய கருத்துகளுக்கு மாறாக, பழிக்குப் பழி என்ற எண்ணத்தை முன்வைத்து ரத்தம் சொட்டும் வகையிலான படத்தை வெளியிட்டு, ‘சண்டியர்’ திரைப்படத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

படத்தை எடுக்கவும் முடியாது… வெளியிடவும் முடியாது
இந்தப் படம் நிச்சயமாகத் தொடங்கப்படக்கூடாது. யாரோ தவறான ஆலோசனைகளை வழங்கி கமல்ஹாசனைத் தூண்டிவிடுவதாகக் கருதுகிறேன். நீங்கள் படத்தை எடுங்கள், நாங்கள் பின்பலமாக இருக்கிறோம் என்று யாரோ அவரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகத் தெரிகிறது.

கமல்ஹாசனுக்கு நான் வழங்கும் முக்கியமான அறிவுரை, இந்த விபரீத முயற்சி வேண்டாம் என்பதுதான். அதையும் மீறி அவர் திரைப்படம் எடுத்தே தீருவேன் என்று முடிவெடுத்தால், அதற்குப் பிறகு நடக்கும் விளைவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் இந்தப் பெயரில் படப்பிடிப்பு நடத்த முடியாது. வேறு இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் தமிழ்நாட்டில் எந்தத் திரையரங்கிலும் இந்தப் பெயரில் திரைப்படத்தை வெளியிட முடியாது. முதலில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைச் சந்தித்து, ஏற்கெனவே எதிர்ப்புக்குள்ளான இந்தப் பெயரை மீண்டும் வழங்கியதை ரத்து செய்யுமாறு வலியுறுத்துவோம். திங்கள்கிழமை அலுவலகம் திறந்திருந்தால் அன்றே சந்திப்பேன். இல்லையென்றால் செவ்வாய் அல்லது புதன்கிழமை சந்திப்பேன்.

கமல்ஹாசன் ஏற்கெனவே ‘விஸ்வரூபம்’ திரைப்படப் பிரச்சனையின்போது தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது பற்றிப் பேசியிருந்தார். இப்போது மீண்டும் ‘சண்டியர்’ படத்தை எடுத்தால், நிச்சயமாக தமிழ்நாட்டை விட்டு அவர் நிரந்தரமாக காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தென் தமிழகத்தில் மீண்டும் சாதி மோதல் ஏற்படும்
தென் தமிழகத்தில் 1995, 1996 காலகட்டங்களில் ஏற்பட்ட சாதிய மோதல்களால் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. தொழில்கள் வளரத் தொடங்கியிருக்கின்றன.

ஒரு காலத்தில் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்த சமூகத்தினர், தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் ஒரே மேடையில் அமர்ந்து பேசும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சமூகத்தினர் ஒரு பக்கமும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன்னொரு பக்கமும் நிற்கக்கூடிய சூழலை உருவாக்கக் கூடாது. ஒட்டுமொத்த சமூக அமைதியையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனின் இந்தப் பட அறிவிப்பைப் பார்க்கிறேன்.

ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் தன்னை உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்திப் பார்க்கும் மனநிலையை ‘சண்டியர்’ என்ற பெயர் உருவாக்குகிறது. அந்தப் பெயருக்கு ஒரு சமூகத்தில் நீதிபதிக்கு இணையான அதிகாரம் கொண்டவர் என்ற பொருளும் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பெயரை ஒரு பிரபலமான நடிகர் தனது திரைப்படத்திற்குப் பயன்படுத்தும்போது அது சமூகத்தில் மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான அடையாளமாகவும் அந்த வார்த்தை பயன்படுத்தப்படலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை தென் மாவட்டங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தப் படத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேள்வி எழுந்தபோது கமல்ஹாசனும் இளையராஜாவும் மன்னிப்பு கேட்டதாகக் கூறியிருக்கிறார்கள். அந்த அனுபவத்திற்குப் பிறகும் கமல்ஹாசன் மீண்டும் இதுபோன்ற பெயரைத் தேர்ந்தெடுப்பது ஏன்?

ஒரு சாதாரண நபர் பயன்படுத்தும் வார்த்தைக்கும் கமல்ஹாசன் போன்ற உலக அளவில் பிரபலமான நடிகர் பயன்படுத்தும் வார்த்தைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர் ஒரு பெயரைப் பிரபலப்படுத்தும்போது அதைப் பின்பற்றிப் பலரும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

அவரது படங்களில் சாதி அடையாளங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ‘தேவர் மகன்’ முதல் பல படங்களில் அவர் பயன்படுத்திய கதாபாத்திரங்களின் பெயர்களையும் அடையாளங்களையும் பார்த்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

கமல்ஹாசன் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால் சமூகப் பொறுப்புள்ள நடிகராக அவரைக் கருத முடியாது. திரைப்படங்களில் ஆபாசம், அரிவாள் கலாச்சாரம், சாதிய மேலாதிக்கம் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தியவராகவே அவரைப் பார்க்கிறேன்.

கமல்ஹாசனை ஸ்டாலின், விஜய் அழைத்துப் பேச வேண்டும்
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கமல்ஹாசனை அழைத்துப் பேசி ‘சண்டியர்’ என்ற பெயரை மாற்றுமாறு அறிவுரை வழங்கினார். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கமல்ஹாசனை அழைத்துப் பேச வேண்டும். திமுகவின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், அந்தப் பதவியைப் பயன்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் கமல்ஹாசனை அழைத்து, தமிழகத்தின் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்தத் திரைப்படம் அமையக்கூடாது என்பதை எடுத்துரைக்க வேண்டும். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த முயற்சிக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தப் பெயரைத் தங்கள் சமூகத்தின் பெருமையாகக் கருதுபவர்களே இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்து எதிர்க்க வேண்டும்.

பிரதமர், உள்துறை அமைச்சரிடமும் முறையிடுவோம்
இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். முதலில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி பெயரை ரத்து செய்ய வலியுறுத்துவோம். அதன்பிறகு மத்திய அரசிடமும் முறையிடுவோம். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் சாதிய மோதலைத் தூண்டும் வகையில் திரைப்படம் எடுக்க முயற்சிப்பதாக முறையிடுவோம். டாளுமன்றத்திலும் இதுகுறித்துக் கேள்வி எழுப்ப வலியுறுத்துவோம்.

சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி போராட்டங்களையும் நடத்துவோம். எந்தச் சூழ்நிலையிலும் ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம். கமல்ஹாசன் இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் அவரது ஒட்டுமொத்த வரலாறும் கேள்விக்குள்ளாகும் சூழல் உருவாகும் என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment