தமிழ்சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவற்றில் சினிமா தொழில் சார்ந்த சங்கங்களை காட்டிலும் தனி நபர்கள், நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்கு எதிராக எந்தவொரு சினிமா சங்கமும் எதிர்வினையாற்ற இயலவில்லை என்பதை ஜெயிலர்-2 திரைப்படம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்களுக்கு என்று தமிழ்நாட்டில் இரண்டு சங்கங்கள் உள்ளது. தங்களது சக உறுப்பினர்களுக்கு தொழில்ரீதியாக பாதிப்பு ஏற்படுகின்ற போது அவர்களுக்கு இந்த சங்கங்களால் எந்தவொரு ஒத்துழைப்பு, தொழில் ரீதியான பாதுகாப்பை வழங்க முடியவில்லை என்பது ஜெயிலர்-2 பட வெளியீட்டின் மூலம் தெரியவருகிறது.
இன்று ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர்2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதிஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமான ரெட்ஜெயன்ட் நிறுவனம் வாங்கியுள்ளத.
தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக சினிமாவில் மாற்றங்கள் ஏற்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படியொரு அதிசயம் ஏற்படவில்லை. இப்போதும் தமிழ் சினிமா வெளியீட்டில் ரெட்ஜெயன்ட் நிறுவனத்தின் ஆளுமையும், ஆதிக்கமும் தொடர்கிறது.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்படும் திரைப்படங்களில் ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் படங்களுக்கு திரையங்க வசூல் மூலம் கிடைக்கும் வருவாயில் 70% விநியோகஸ்தர்களுக்கு என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் செய்வது ரெட் ஜெயண்ட் வழக்கம். இது சில திரையரங்குகளுக்கு 80% மாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதும் உண்டு.
சினிமா போக்கை தீர்மானிக்கும். நிதியாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் திரையரங்க தொழிலில் முதலீடு செய்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில், 70% என்பதில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது. ஜெயிலர்2 திரைப்பட வெளியீட்டில் சேலம் விநியோகப் பகுதி தவிர்த்து 60%, 65% என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் செய்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு 70% க்கு குறைவாக ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதில் உறுதி காட்டியதால் சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜெயிலர்2 படம் திரையிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் சினிமாவில் திமுக ஆட்சியே நடக்கிறது. திரையரங்க உரிமையாளர்களுக்கு என இரண்டு சங்கங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் நலன் காக்க இது போன்ற சூழலில் சங்கங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகி விடுகின்றனர்.
திரையரங்க தொழிலில் பராமரிப்பு, மின்கட்டணம் என்பது தமிழ்நாடு முழுவதும் ஒரே அளவில் இருக்கும் போது தியேட்டருக்கான சதவீத தொகையில் கோவைக்கு 40%, மதுரைக்கு 35%, சேலத்திற்கு 30% என பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதை சங்கங்கள் எதிர்ப்பது, கண்டிப்பது கிடையாது. தங்கள் அளவில் பயன் அடைந்தால் போதும் என்கிற மனோநிலையில் நிர்வாகிகள் செயல்படுகின்றனர். இதனால் ஆட்சி மாறினாலும் சினிமாவில் காட்சிகள் மாறவில்லை என்கின்றனர்.