டிரெண்டிங் – திரைப்பட விமர்சனம்

நவீன கைபேசி பயன்படுத்துபவர்கள் எல்லோரும் வீடியோ வெளியிடும் காலம். தங்கள் மீதான கவனத்தை ஈர்க்கவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துயுடியுப் மூலம் வருவாய் ஈட்டவும் முயற்சித்து வருகின்றனர். இலட்சக்கணக்கானவர்களோடு போட்டி போட வேண்டியிருப்பதால் தங்கள் அந்தரங்க விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்கிற நிலைக்குச் செல்கிறார்கள்.அதனால் விரும்பதகாத நிகழ்வுகள் தினசரி நடந்து வருகின்றன. இதை மையமாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதையின் திரை வடிவமே  டிரெண்டிங் படம்.

நாயகன் கலையரசன்,நாயகி பிரியாலயா ஆகிய இருவரும் கணவன் மனைவி.இவர்கள் யுடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது வலையொளி அழிந்துவிடுகிறது.வருமானம் இன்றி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.அப்போது, தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் முகம் தெரியாத நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்.கடுமையான விதிமுறைகள் கொண்ட அப்போட்டியில் பங்கேற்கிறார்கள். அதனால் பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்கிறது படம்.

கலையரசனும் பிரியாலயாவும், தாம் இருவரும்தான் படத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.பிரேம் குமார், பெசண்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

குறுகிய கதைக்களம் என்றாலும் அதை வைத்துக் கொண்டு காட்சிகளில் வேறுபாடு காட்டி படத்தை எளிமையாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும்வண்ணம் அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

நாகூரான் இராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படம் வேகமாக நகரவேண்டும் என்கிற சிரத்தையுடன் உழைத்திருக்கிறார். யுடியுப்பால்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டியதோடு,ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டும் சில நிகழ்வுகளைக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.

 

Comments (0)
Add Comment