தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கவனிப்பில் கரையேறும் ராதாகிருஷ்ணன், கதிரேசன்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026 -2029 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதியன்று சென்னையில்நடைபெறவுள்ளது.
1524 வாக்களர்கள் வாக்களிக்க உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 33 பதவிகளுக்கு 88 வேட்பாளர்கள்போட்டிபோடுகின்றனர். தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், தற்போதைய துணை தலைவர் தமிழ்குமரன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றனர்.
இவர்களை தவிர கடந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த மன்னன் தனித்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார். இருந்த போதிலும் போட்டி என்பது முரளி ராமசாமி -தமிழ்குமரன் இருவரது அணிக்கு இடையில் தான் உள்ளது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
“தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களுக்கே” என்கிற கோஷத்தை முன்வைத்து வாக்கு கேட்டு வருகிறது முரளி ராமசாமி அணி “தயாரிப்பாளர்கள் நலம் காப்போம்” என்பதை முன்வைத்து தமிழ்குமரன் அணி வாக்கு கேட்டு வருகின்றனர். எந்த அணி வெற்றி பெறும் என்பதை உறுதிபட கணிக்க முடியாத கடும் போட்டியாகவே இருக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
நிர்வாக குழுவில் முக்கிய பொறுப்புகளாக இருக்கும் இரண்டு செயலாளர் பதவிக்கு1. கமீலா நாசர், 2. கதிரேசன்,3.ராதாகிருஷ்ணன்,
4. ராஜா,5. சௌந்தரபாண்டியன் ஆகிய ஐந்து பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவரும் நீண்ட காலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த காலத்தில்பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிட்டு தொடர்ச்சியாகவெற்றி பெற்று வருகின்றனர். தற்போது இருவரும் செயலாளர்களாக இருந்து வருகின்றனர்.
இருவருமே வெற்றியை தீர்மானிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்களர்களை தங்கள் ஆதரவாளர்களாக கொண்டுள்ளனர். அதனால் மற்ற வேட்பாளர்களுக்கான ஆதரவும், வெற்றி வாய்ப்பும் குறைவாகஇருப்பதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எந்த அணியிலும் இணையாமல் தனித்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள கதிரேசன் தனது படத்தயாரிப்பு, பைனான்ஸ் தொழில் இவற்றுக்கான பாதுகாப்புக்காகவே தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிட்டு பதவியில் இருந்து வருகிறார்.
சங்கத்தின் வளர்ச்சிக்கு கதிரேசன் பங்களிப்பு எப்போதும் இருந்ததில்லை. இவரால் குழப்பங்கள் மட்டுமே சங்கத்தில் ஏற்பட்டது உண்டு என்கின்றனர். இருந்த போதும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்குகாரணம்
வாக்காளர்களை தேர்தல் காலத்தில் மட்டும் கதிரேசன் அணுகுவது இல்லை. வருடம் முழுவதும் அல்லது வாக்காளர்களின் அவசர தேவைகளுக்கு உதவிவழங்கும்
கற்பகவிருட்சமாய் இருப்பதால் அவரது வெற்றி சாத்தியமாகிறது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்டு விஷாலிடம் வெற்றிவாய்ப்பை இழந்த ராதாகிருஷ்ணன் பிறபதவிகளுக்கு
போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். கதிரேசனை போன்று தொடர்ந்து படங்களை ராதாகிருஷ்ணன் தயாரிப்பது இல்லை என்றாலும் சங்க நிர்வாக குழுவில் இவரது ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களின் ஆதரவு தொடர்ச்சியாக ராதாகிருஷ்ணனுக்கு இருந்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்கள் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் பேசக்கூடியவராக ராதாகிருஷ்ணன் இருக்கின்றார். அது மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு, அவசரத்திற்கு பிரதிபலன் பாராமல் உதவிகளுக்கு ஆபத்பாந்தவனாக ராதாகிருஷ்ணன் இருப்பதால் அவருக்கான நிரந்தர வாக்கு வங்கியை அவரது போட்டி வேட்பாளர்களால் சிதைக்க முடியவில்லை அதனால் வாக்காளர்களின் முதல் விருப்ப தேர்வாக இருக்கிறார்.
இதனால் களத்தில் இருக்கும் மற்ற மூன்று வேட்பாளர்களும் ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவருக்கும் கடுமையான போட்டியாளர்களாக இல்லாமல் தொலை தூரத்தில் உள்ளனர்.
நடிகர் நாசரின் துணைவியார் என்கிற மிகப் பெரிய அடையாளத்துடன் ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளராக கமீலா நாசர் போட்டியிட்ட போதும் அவரது மேட்டிமைதனம் காரணமாக வாக்காளர்கள் மத்தியில் ஆதரவு பலவீனமாகவே உள்ளது.அவர் சார்ந்துள்ள அணியை ஆதரிப்பவர்கள் கூட அவருக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்கின்றனர். கடுமையான போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவரும் மீண்டும் செயலாளர் பதவிக்கு வெற்றி பெறுவார்கள் என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.
– இராமானுஜம்

 

Comments (0)
Add Comment