பயமுறுத்தும்” டார்க்” திரைப்படம் எப்படியிருக்கு?

பேய்ப்படங்கள் மற்றும் திகில் படங்கள் எல்லாம் நகைச்சுவையாக பார்க்க பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் படமாக வந்திருக்கிறது “டார்க்”ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் அதனை அறிந்தவர்கள்  அந்த வீட்டுக்கு குடி போகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர்,மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொள்கிறார்.இதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரவில்லை. குறைந்த வாடகை என்பதால், அந்தவீடு பற்றிய உண்மை தெரிந்தும் குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.அவரும் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு இறக்கிறார்.வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறக்கிறார்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.அதில் எல்லாக் கேள்விகளுக்கும் திடுக்கிடும் விடை தெரிகிறது.இதுதான் டார்க் படத்தின் திரைக்கதை.

துள்ளலான இளைஞராக அறிமுகமாகி பேய்வீட்டுக்கு குடிபோனதும் பயத்தில் உறைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் மரணத்தைச் சந்திக்கிற வேடமேற்றிருக்கிறார் அறிமுக நாயகன் அஜய்கார்த்திக்.ஜாலியாக தொடங்கி படிப்படியாக அச்சத்தில் உறையும் கதாபாத்திரத்துக்கு முழுநியாயம்செய்திருக்கிறார்.

இறந்துபோன அவர் திடுமென எழுந்து நட்டியிடம் பேசும் காட்சி உச்சம்.

அஞ்சனா நேத்ரனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நிறைவாக இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடமேற்றிருக்கும் நட்டி,கதையின் மையப்புள்ளியாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கிறார் அண்மையில் மறைந்த கே.பாக்யராஜ்.அவருடைய திரைஇருப்பு படத்துக்குப் பலம்.

சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

ரவி சக்தி ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் மனநடுக்கங்கள் காட்சிகளிலும் எதிரொலித்து பயமேற்றியிருக்கிறது.

மனு ரமேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசையில் திகிலுக்கு திகிலூட்டியிருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் கதிரேஷ் அழகேசன் முதல்பாதியை கனகச்சிதமாகச் செய்துவிட்டார்.ஒப்பீட்டளவில் இரண்டாம்பாதி பலவீனமாக இருக்கிறது.

கலைஇயக்குநர் சண்முகராஜா,சண்டைப்பயிற்சி இயக்குநர் நைஃப் நரேன்,நடனஇயக்குநர் சதீஷ் ஆகியோர் நாயகன் அஜய்கார்த்திக்குக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

இயக்குநர் கணேஷ் கே.பாபு கதை எழுதியுள்ளார்.ஒரு சின்னப் புள்ளியை வைத்து பெரிய கோலம் போடும் கலை அவருக்குக் கைவந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன்இயக்கியிருக்கிறார்.

திகில் படத்தை திகில் படமாகவே கொடுத்து திகிலூட்டியிருக்கிறார்.
Comments (0)
Add Comment