பரிசு – திரைப்பட விமர்சனம்

இலட்சிய உறுதி கொண்ட இளைஞர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ? அந்தத் துறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே ஓர் இளம்பெண் அவ்விடத்தில் இருந்தால் துறை ரீதியான சிக்கல்களோடு பெண் என்பதாலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். அந்த எதார்த்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் பரிசு.

பொறியியல் மாணவியான நாயகி ஜான்விகா,துப்பாக்கி சுடுதல், விவசாயம் ஆகியனவற்றிலும் பெரும் ஈடுபாடு.அதில் தீவிரமாக அவர் ஈடுபட்டிருந்தாலும் மாணவி என்பதால் காதல் கோரிக்கைகள் அதுதொடர்பான சிக்கல்கள் நிறைய வருகின்றன.அவற்றை எதிர்கொள்வதோடு அவருடைய தந்தையின் கனவான இராணுவத்தில் சேருவதையும் நிறைவேற்றப் போராடுகிறார்.அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடந்தன? என்பதைச் சொல்லியிருக்கிறது” பரிசு” திரைப்படம் .

நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா, கல்லூரி மாணவி, துப்பாக்கி சுடும் வீரர், விவசாயி, இராணுவ வீரர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.அவற்றிற்காக தோற்ற மாற்றம் மட்டுமின்றி நடிப்பிலும் அந்தந்த குணங்களைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

கல்லூரியில் ஜானவிகாவைச் சுற்றிச் சுற்றி வந்து காதல் தொல்லை கொடுக்கும் வேடத்தில் நடித்திருக்கும் கிரண்பிரதாப்,நாயகியின் காதலராக நடித்திருக்கும்ஜெய்பாலா,நாயகியின் தந்தையாகவும் முன்னாள் இராணுவ வீரராகவும் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன்,வில்லனாக நடித்திருக்கும் சுதாகர் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

மனோபாலா, சின்னப்பொண்ணு, சென்ட்ராயன் ஆகியோருக்கு இரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு.அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

ராஜீஷ் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் இரகம். ஹமரா வின் பின்னணி இசை தாழ்வில்லை.

ஒளிப்பதிவு செய்துள்ள சங்கர் செல்வராஜ், கதைக்களத்துக்குத் தேவையான ஒளியமைப்புகளோடு காட்சிகளை நிறைவாக அமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர்கள் சி.எஸ்.பிரேம்குமார், இராம் கோபி ஆகியோரின் உழைப்பால் படம் விரைவாக நகர்கிறது.

சண்டை இயக்குநர்கள் கோட்டி மற்றும் இளங்கோ ஆகியோரால் நாயகி ஜானவிகாவுக்கு நற்பெயர்.

கலா அல்லூரி எழுதி இயக்கியுள்ளார்.பொதுவாகக் கதாநாயகர்களை வைத்துக் கொண்டு சொல்லும் கதையை இவர் கதாநாயகியை மையப்படுத்திச் சொல்லியிருக்கிறார்.இலட்சியத்தை அடையும் நோக்கோடு பயணிக்கிறார் என்று மட்டும் இல்லாமல், அதற்கு வெளியே, ஒரு மகிழுந்து மீது சுமையுந்து மோதி விட்டுத் தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கும் நாயகி,மகிழுந்தில் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார்.அதன் பின்னணியில் உள்ளவர்கள் ஜான்வியைக் கடத்துகிறார்கள்.அவர்களை எதிர்கொள்ளும் விதத்தையும் சொல்லியிருக்கிறார்.

இவற்றுடன், பெண்களுக்கேயுரிய விழிப்புணர்வு, உத்வேகம்,பொறுப்பு ஆகியனவும் இணைந்திருப்பது படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது

 

Comments (0)
Add Comment