பொறந்த இடத்தை விட்டு உயிர்பிழைத்து, பொழப்பு நடத்தபுலம்பெயர்தல் என்பது சாதாரண வலி அல்ல. நாடுகடந்து அகதிகளாக வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அதன் வலி புரியும்.
இலங்கையை பூர்வீகமாக கொண்டசோமீதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நீளிரா’ படம் புலம்பெயர்தலின் வலியும் போரின் உளவியலையும் ஆழமாக பேசும் பொறுப்பான படமாக பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
பல திரை துறைபிரபலங்களும் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் பாலா இப்படம் பற்றி கூறியிருப்பதாவது
தனது குரு பாலுமகேந்திராவின் நிறைவேறாத ஆசையை நிவர்த்தி செய்த படமாக நீளிரா படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்
“நந்தா படம் முழுக்க முழுக்க இந்த வலியை மட்டும் பேசிய படம் இல்லை, அதில் சில ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்கும். நீங்கள் எடுத்திருப்பது மிகவும் பொறுப்பான படம். அப்படிப் பார்க்கையில் இது எனக்கு குற்ற உணர்ச்சியாக கூட இருக்கிறது. உங்களுடைய சினிமா எனக்கு புனிதமானதாக இருக்கிறது.
பாலுமகேந்திரா சாருக்கு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததை, அவரது மூத்த சிஷ்யன் என்ற முறையில் அறிவேன். ஆனால் அது அவரால் முடியாமல் போனது. அப்படி யாராவது எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது.
அதை ஒரு சிஷ்யனாக நிவர்த்தி செய்திருக்கிறீர்கள் எனும்போது உங்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். புலம்பெயர்தல் என்பது சாதாரண வலி அல்ல. பிறந்த, விளையாண்ட, வளர்ந்த இடத்தை விட்டு, காதலை தொலைத்து நாடுகடந்து செல்வது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.ஆனால் இப்போது உங்கள் படம் பார்க்கையில் அனுபவிக்கவில்லை என்றாலும், உங்கள் படத்தை பார்த்துபுரிந்து கொள்ள முடியும் என தோன்றுகிறது.
அந்த வீட்டுக்குள் நடப்பதை காட்டினாலும், அதனை சுற்றி போர் நடந்து கொண்டிருக்கிறது என்ற பயத்தை உண்டு செய்தது. ஒன்றரை மணிநேர படம் என்றாலும், அவ்வளவு நேரமும் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வைத்திருப்பது தான் இயக்குநரின் வெற்றி.” எனப் பேசியுள்ளார்.