ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் “காந்தி கண்ணாடி”திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது,
“காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்ளுகிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு – இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது.”
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் KPY பாலா, இப்போதும் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம், ஒரு ஆழமான உணர்ச்சி கொண்ட கதாநாயகனாக திரையில் அறிமுகமாகிறார்.
இயக்குநர் ஷெரீஃப், இப்படத்தை இயக்குகிறார். இவரது முந்தய படம் ‘ரணம்: அறம் தவறல்’, விமர்சகர்களின் பாராட்டை பெற்று, ரசிகர்களிடமும் பிரபலமடைந்தது.
இப்போது உண்மைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த புதிய படம், ‘ஃபீல்-குட்’ உணர்வுகளை தழுவிய ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குனர் ஷெரிப் கூறியதாவது,
“ரணம் போன்ற படத்திற்குபிறகு, நான் ஒரு நிலையான, மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையை கேட்டவுடனே ‘ஆம்’ என்ற பதில் சொல்லியது எனக்கு மிக பெரிய உற்சாகத்தை அளித்தது.
இது பாலா ஹீரோவாகும் முக்கியமான படமாகும், மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா, நமீதா போன்ற முக்கிய கலைஞர்கள் இருப்பது, படத்தின் கதைக்கு மேலும் வலிமை சேர்க்கிறது என்றார்.