பாலுமகேந்திரா ஆசையை நிறைவேற்ற” நீளிரா”

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இயக்குநர்பாலு மகேந்திரா தன்னிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம்  ‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.’ என கூறியிருக்கிறார். அதனை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் “நீளீரா”
     ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நீளிரா படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு
 கே இசையமைத்திருக்கிறார்.
 இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காகஇரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
 ‘நீளிரா’ படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில்
இயக்குநர் சோமீதரன் பேசுகையில்,
 “சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது.
 என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா…! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது.
இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது.
இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும்,
இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.
இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி… அங்கும். மக்கள் இருப்பார்கள்.
 அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா,அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் ‘நீளிரா’.
போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது.
அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்த திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.
 என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாககாண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.
எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.
போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.
இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் ‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.’ என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.
Comments (0)
Add Comment