“மிஸ்டர் எக்ஸ் படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் சம்பந்தமில்லை” – இயக்குநர் மனு ஆனந்த் 

FIR படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்’படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் நாயகன் ஆர்யா. மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார். கௌதம் கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மனு ஆனந்த்,
 “மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம்தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படமல்ல. தமிழ்ப் படம். அந்த ஒரு நோக்கத்தோடுதான் இந்தப் படத்தை எடுத்தேன். போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம்உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கேகூட என்னால் சொல்லமுடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றி கார்டில்கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்யமுடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதைதான் இது.
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல  பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப்போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல.
இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார் இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார் ” என்றார்.

 

Comments (0)
Add Comment