கதாநாயகி தேவிகா சதீஷை பெண் பார்க்க வருகிறார்கள்காபி கொடுக்கும் பெண்ணை பார்த்தவுடன் மாப்பிள்ளை வீட்டார், இந்த பெண்ணுக்கு திருமணம் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதுஎன ஆதாரத்துடன் அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர்.
அய்யய்யோ அப்படியெல்லாம் நடக்கலை என்று நாயகியும், அவரது குடும்பத்தினரும் மறுக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கொடுத்த தகவலை வைத்து தனக்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் யு-டியூப்பர் தேவ்வை சந்திக்கிறார் நாயகி. இருவருக்கும் தெரியாமல் திருமணம் நடந்தது உறுதியாகிறது. அது எப்படி நடந்தது.? தங்களுக்கு தெரியாமல் நடந்த திருமணத்தை ‘சட்டப்பூர்வமாக’ உடைக்க நினைக்கும் இருவரும் காதலித்தால் என்ன நடக்கும் என்பதுதான் யோலோ கதை.
யோலோ என்றால் என்ன? நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள் என அர்த்தமாம். இந்த பெயரில் நாயகன் ஒரு யுடியூப் சேனல் நடத்துகிறார்கள்.
பிராங்க் செய்து வீடியோ போடும் யுடியூப் கும்பல். அதில் இருக்கும் ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின். இருவருக்கும் இடையேயான காதல். ஹீரோயினிடம் காதலை சொல்லாமல் தவிக்கும் ஹீரோ. இவர்களுக்கு உதவும் நண்பர்கள். வழக்கமான வில்லன் என்று கதை ஆமை வேகத்தில் நகர்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே இருவருக்கும் திருமணம் நடந்தது என்பது மட்டும் கொஞ்சம் புதுசு. அதாவது, இரண்டு காதலர்கள்(பேய்கள்) இவர்கள் உடம்பில் புகுந்து திருமணம் செய்து, பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்கி ஹனிமூன் கூட போயிட்டு வந்து விடுகிறார்கள். ஆனால், நடந்தது இவர்களுக்கு தெரியாதாம்.
நாயகன் தேவ் அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில் பாஸ் மார்க் வாங்க கஷ்டப்படுகிறார். ஹீரோயின் தேவிகா ஓரளவு நடிக்க முயற்சித்திருக்கிறார். நண்பர்களாக வருபவர்கள் நடிப்பு என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். எனக்கு செகன்ட் ஹேண்ட்தான் பிடிக்கும் என்று வரும் மாப்பிள்ளை நிக்கி ரொம்பவே இம்சை கொடுக்கிறார். இவர்களை தவிர, மந்திரவாதியாக வருபவர், வில்லன் என அனைவரும் பார்வையாளர்கள் பொறுமையை சோதிக்கிறார்கள். மந்திரவாதியை பார்த்தால் பயம் வரணும். இதில் சிரிப்பு வருகிறது. சரி, பேய் பிளாஷ்பேக் வலிமையாக இருக்கும் என நினைத்தால் அதிலும் சொதப்பல்.
மகளுக்கு திருமணம் நடந்தது பெற்றோருக்கு தெரியாது என்றாலும்அவர் வெளிநாடு சென்றது கூடவா அவர்களுக்கு தெரியாது? அந்த பேய்கள் உண்மையிலே என்ன நினைக்கிறது, வில்லன்களுக்கு என்ன பிரச்னை என பல கேள்விகள். சூரஜ் ஒளிப்பதிவும், சேவியர் இசையும் கொஞ்சம் ஆறுதல்.
மற்றபடி, ஆரம்பம் முதல் கடைசிவரை இது காமெடி படமா? திரில்லர் படமா? பேண்டசி படமா? பேய் கதையா? என்று குழம்ப வைத்து அனுப்புகிறார்கள். இவ்வளவு செலவு செய்து, இந்த காலத்தில் இப்படியொரு படமா? ஏன் எடுத்தார்கள்? என்ன சொல்ல வருகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.