காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி நட்ராஜ்.அவர், பிரதமர் பாதுகாப்பு பணிக்குசென்றபோது அவர் பணியாற்றிய காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.
அந்த நேரத்தில், தன் மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது விசயம் கசிந்தால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், வெளியே தெரியாத வகையில் சிக்கலைச் சமாளிக்க காவல்துறை முயல்கிறது.அந்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதைப் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
நட்டி நட்ராஜ் கதையின் நாயகன் என்றாலும் அவருடைய திரை இருப்பு குறைவு,ஆனாலும் அவருடைய கதாபாத்திரமும் அதற்கான நடிப்பும் சிறப்பு.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், அப்பாவிகளின் பிரதிநிதி போல் இருக்கிறார்.காவலர்களிடம் பொங்குமிடம் சிறப்பு.
காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் அக்ஷரா ரெட்டியின் இருப்பும் நடிப்பும் படத்துக்குப் பலம்.
காவலராக நடித்திருக்கும் மூணார் ரவி,நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் இணையராக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை ஆகிய அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
குணா பாலசுப்பிரமணியன் பின்னணி இசையால் படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷுக்கு சவாலான கதைக்களம்.அதை சிறப்பாக எதிர்கொண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கக்கூடிய கதை அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதை அதற்குள் அத்தியாவசியமான சமுதாயப்பார்வை ஆகியனவற்றைச் சரியாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.