மார்க்சிஸ்டுகளின் அரசியல் கோட்டையாக இடதுசாரிகளின் அரசியல் கோட்டையாக கேரளம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
ஏ.கே.கோபாலன்,இ.எம்.எஸ்நம்பூதிரிபாட்,இ.கே.நாயனார்,வி.எஸ்.அச்சுதானந்தன் போன்ற தொடக்ககால கம்யூனிஸ்டு தலைவர்களுடன் இணைந்து கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வர்க்க எதிரிகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுத்தவர்
பி.கிருஷ்ணபிள்ளை.
இவரின் வரலாற்றுச் சுவடுகள் வழியாக கேரளத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களை மக்களின் எழுச்சிகளை சிறந்ததோர் திரைப்படமாக வீரவணக்கம் எனும் பெயரிலான திரைப்படத்தை இயக்குநர் அனில்நாகேந்திரன் தயாரித்து இயக்கி இருக்கிறார்.
வீரவணக்கம் திரைப்படம் தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில் இன்று முதல் வெளியாகியிருக்கிறது
ஒரு பொழுதுபோக்குக் கதையை திரைப்படமாக எடுத்து பணம் சம்பாதிப்போம் என நினைக்காமல் இரத்தமும் சதையுமான உணர்வுப்பூர்வமான ஓர் உண்மைக் கதையை திரைமொழியில் எழுதி பார்ப்போர் குருதி கொப்பளிக்கவும் கண்கள் கண்ணீரில் மூழ்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் அனில் நாகேந்திரன். “வீரவணக்கம்” எப்படி இருக்கிறது.
1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன.
அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம்.
அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளை வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அந்த வேடத்துக்கு உருவம் கொடுத்ததோடு உயிரும் கொடுத்திருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி.
பொதுவுடைமைவாதியாக நடித்திருக்கும் பரத், கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் வசனங்கள் மற்றும் அவர் நடிப்பு ஆகியன சிறப்பு
போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பிரேம்குமார் மற்றும் மேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆய்ஷ்விகா ஆகியோரும் நன்று.
கவியரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவும் நேர்த்தியும் அமைந்திருக்கிறது.அந்த கால கட்டதைகண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர்இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் எழுச்சியூட்டுவதாக இருக்கின்றன.